இன்று தமிழக பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் 4 நான்கு பேர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்பொழுது பேசிய சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், “உழைக்கும் மகளிருக்கான இருசக்கர வாகனத்திற்கு மானியம் தரும் திட்டத்தை மாநில அரசு நிறுத்தியுள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு உழைக்கும் மகளிருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களின் முன்னேற்றம் என்பது யாரையும் சாராமல் முடிவெடுப்பது, அவர்களுடைய பணிகளை அவர்களே செய்வது. இதற்கு அடிப்படையில் முக்கியமானது மகளிரே வாகனங்களை இயக்குவது. ஆனால் அரசு, பெண்கள் வாகனத்திற்கு கொடுக்கும் மானியத்தை நிறுத்துமேயானால் அது வெறும் வாகனத்திற்கான மட்டுமல்ல. பெண்களுக்கான இருசக்கர வாகனமானது அவர்களது இறக்கைகளாக மாறியுள்ளது. எனவே இந்தத்திட்டத்தை மீண்டும் அரசு தொடர்ச்சியாக நடத்த வேண்டும்'' என்றார்.