முகநூலில் அறிமுகமாகி, பெண் குரலில் பேசி தனியே அழைத்து வழிப்பறியில் ஈடுபட்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
மாதவரத்தைச் சேர்ந்த ஐயப்பன் என்பவர் சில நாட்களுக்கு முன்பு மாதவரம் போலீசாரிடம் புகார் ஒன்றை கொடுத்திருந்தார். அந்தப் புகாரில், ரெட்டேரி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அடையாளம் தெரியாத நபர்கள் தன்னை வழிமறித்து தாக்கி தன்னிடம் இருந்த பிரேஸ்லெட், செல்ஃபோன் ஆகியவற்றை வழிப்பறி செய்ததாக கூறியிருந்தார். இதேபோல் அந்தப் பகுதியில் வழிப்பறி சம்பவங்கள் குறித்த புகார்கள் அதிகமானதை அடுத்து போலீசார் அந்தப் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது போலீசாரை கண்டவுடன் தப்ப முயன்ற நான்கு பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் விரட்டிப் பிடித்து விசாரணை செய்ததில், நான்கு பேரும் முகநூலில் பழகி, பெண் குரலில் பேசி தனியே வரவழைத்து வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட விஜயகுமார், மோனிஷ், டனிஷ், தமிழ் ஆகிய நான்கு பேரிடமும் இருந்து திருட பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள், செல்ஃபோன்கள் மற்றும் திருடப்பட்ட நகைகள் ஆகியவைப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் ஐயப்பனிடம் வழிப்பறியில் ஈடுபட்டதும் இந்தக் கும்பல்தான் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.