உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கடலூர் காவல்துறை சார்பில் காவலர்கள் மற்றும் காவல் துறை பணியாளர்களுக்காக மகளிர் தின விழா நடைபெற்றது.
துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தி தலைமையில் நடைபெற்ற விழாவில் மகிளா நீதிமன்ற அரசு சிறப்பு வழக்கறிஞர் செல்வபிரியா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அவர் பேசுகையில், "மகளிர் தினத்தை கொண்டாடும் நாம் பிரச்சனைகளை தைரியத்துடன் எதிர்கொள்ள வேண்டும். மேலும் பெண்ணுக்கு எதிரி பெண் என்ற கருத்தை மாற்றி அமைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையத்திற்கு வரும்போது அவர்களை கனிவுடன் அணுகி, குறைகளை கேட்டறிந்து, அவர்களின் பயத்தை போக்கி பிரச்சனைக்கு தீர்வு காண முயன்றால் பெண் காவலர்களின் பெருமை மேன்மை அடையும்" என்றார்.
டி.எஸ்.பி சாந்தி பேசும்போது, "காவல்துறையில் நாம் பணியாற்றுவதில் பெருமை கொள்வோம். தற்போது காவல்துறையில் மகளிரின் பணி சிறப்பாக உள்ளது. மகளிர் காவலர்கள் எதற்கும் அச்சமின்றி பணியாற்றி காவல்துறைக்கு பெருமை சேர்க்க வேண்டும். பாதிக்கப்பட்டவரின் கண்ணீரை போக்கும் நாம் நமது கண்ணில் எக்காரணத்தை கொண்டும் கண்ணீர் வரவைக்க கூடாது. மன தைரியத்தை இழக்க கூடாது" என்றார். இவ்விழாவில் காவல் ஆய்வாளர்கள் ஈஸ்வரி, சரஸ்வதி, எழிலரசி மற்றும் உதவி ஆய்வாளர்கள், மகளிர் காவலர்கள் பங்கேற்றனர்.
விழாவில் பெண் காவல்துறையினர் தங்களுடைய கருத்துகளை பரிமாறிக் கொண்டும், பாடல்கள் பாடியும், செல்போன் மூலம் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். விழாவில் பங்கு பெற்ற அனைத்து பெண் காவல் துறையினர்க்கும் நினைவு பரிசாக கேடயம் வழங்கப்பட்டது. பின்னர் அனைவரும் பலுனை வானத்தில் பறக்கவிட்டு மகிழ்ந்தனர்.