ஒமிக்ரான் வகை கரோனாவைத் தடுக்க தமிழ்நாட்டு விமான நிலையங்களில் இரண்டாவது நாளாக கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே குறிப்பிடப்பட்ட 12 நாடுகள் மட்டுமின்றி மேலும் சில நாடுகளுக்கும் ஒமிக்ரான் கரோனா பரவியுள்ளது. தென்னாப்பிரிக்கா, பிரேசில், போட்ஸ்வானா, ஹாங்காங், பிரேசில், இஸ்ரேல், நார்வே, சீனா, சிங்கப்பூர், ஜிம்பாப்வே, நியூசிலாந்து, மொரீசியஸ் ஆகிய நாடுகளுக்குச் செல்லும் பயணிகளும், அங்கிருந்து இங்கு வரும் பயணிகளும் தீவிர மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். அதேபோல், உள்நாட்டில் பல்வேறு மாநிலங்களிலிருந்து வருபவர்களிடமும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கான கட்டணம் ரூபாய் 900இலிருந்து ரூபாய் 700 ஆக குறைக்கப்பட்டுள்ளது. எனினும் பரிசோதனை முடிவுக்கு ஆறு மணி நேரம் ஆவதாக பயணிகள் கூறுகின்றனர். ரேபிட் பரிசோதனைக்கான கட்டணம் ரூபாய் 4,000- இலிருந்து ரூபாய் 3,400 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்தப் பரிசோதனை முடிவுகள் 30 - 45 நிமிடங்களுக்குள்ளாகக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
நோய்த்தொற்று அறிகுறி இருப்பவர்களை உடனே தனிமைப்படுத்த விமான நிலையத்தில் தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் சென்னை உள்ளிட்ட சர்வதேச விமான நிலையங்கள் பரபரப்பாகக் காட்சியளிக்கின்றன.