கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் மாதம் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, ஸ்ரீமுஷ்ணம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களை சிதம்பரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் கூட்டாய்வு செய்யும் பணி நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக சிதம்பரம் சார் ஆட்சியர் ஸ்வேதா சுமன், சிதம்பரம் உதவி காவல் கண்காணிப்பாளர் ரகுபதி, வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் விமலா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பள்ளி வாகனங்களில் என்ன மாதிரியான விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும், வாகனத்தில் முதலுதவி பெட்டி, அவசர வழி, பாதுகாப்பு சாதனங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள்.
இதனைத் தொடர்ந்து சிதம்பரம் தீயணைப்புத் துறையினர் சார்பில் பள்ளி வாகனத்தில் திடீரென தீப்பற்றினால் அதனை எவ்வாறு அணைக்க வேண்டும் என்பது குறித்து செயல்முறை விளக்கத்தை அளித்தனர். பின்னர் 108 அவசர ஊர்தி வாகன ஊழியர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சாலையில் செல்லும்போது திடீரென விபத்து ஏற்பட்டால் விபத்தில் சிக்கியவர்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து விளக்கிக் கூறினார்கள்.
இந்நிகழ்வில் சிதம்பரம் உட்கோட்ட பகுதியில் 200-க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்கள் மற்றும் அவற்றின் ஓட்டுநர்கள், நடத்துநர்கள், உதவியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பள்ளி வாகனங்கள் கண்காணிக்கப்படும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம் தெரிவித்தார்.