விழுப்புரம் மாவட்டம், விராட்டி குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர், தமிழ்நாடு மின்வாரியத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் தனது ஊரில் உள்ள விவசாய நிலத்தில் விவசாயம் செய்வதற்காக பம்பு செட்டு அமைக்க மின் இணைப்பு கேட்டு சுயநிதி திட்டத்தின் கீழ் முறைப்படி பணம் செலுத்தி விண்ணப்பித்துள்ளார். ஆனால், ராஜேந்திரனுக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை.
சந்தேகமடைந்த ராஜேந்திரன், உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள வேண்டி 10.10.2019ஆம் தேதி வரை மின் இணைப்பு கேட்டு காத்திருப்பவர்கள் பட்டியலை தெரிவிக்குமாறு தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கடந்த 15.10.2019ம் தேதி ராஜேந்திரன் விண்ணப்பித்துள்ளார். இதில், செஞ்சி மின்பகிர்மான வட்ட அதிகாரி மட்டும் உரிய தகவலை அளித்துள்ளார். ஆனால் விழுப்புரம், திண்டிவனம், கண்டமங்கலம் ஆகிய மின் பகிர்மான வட்டச் செயற்பொறியாளர்கள் உரிய தகவல் அளிக்கவில்லை.
இது குறித்து ராஜேந்திரன் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தார். இவரது மேல்முறையீட்டு மனு மாநில தகவல் ஆணையர் தமிழ் குமார் முன்னிலையில் சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிந்து ஆணையர் தமிழ்குமார், “வேண்டுமென்றே திட்டமிட்டு ராஜேந்திரனுக்கு தகவல் தர மறுத்து காலம் கடத்தியுள்ளனர் என்பது ஆதாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது. எனவே, தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி தகவல் வழங்க மறுத்ததால் சட்ட விதி 19 (8) (B) ஆகிய பிரிவுகளின் படி இந்த ஆணை கிடைக்கப்பெற்ற ஒரு வார காலத்திற்குள் அப்போதைய விழுப்புரம், கண்டமங்கலம், திண்டிவனம், பகிர்மான வட்டத்தில் மின்வாரிய செயற் பொறியாளர்களாக பணியில் இருந்தவர்கள் தலா ஐந்தாயிரம் ராஜேந்திரனுக்கு நஷ்ட ஈட்டு தொகையாக வழங்க வேண்டும். தகவல் பெறும் உரிமைச் சட்டப் பிரிவு 20 (1)ன் படி நாள் ஒன்றுக்கு 250 ரூபாய் வீதம் 25 ஆயிரம் ரூபாய் கூடுதலாக ஏன் அபராதம் விதிக்கக்கூடாது எனவே இதற்கான விளக்கத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராகி எழுத்து பூர்வமாக அளிக்க வேண்டும்” என்று மாநில தகவல் ஆணையர் தமிழ் குமார் தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.