கரோனாவால் பாதிக்கப்பட்ட இந்தியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் குணமடைந்து மருத்துமனையில் இருந்து வீடு திரும்பினார்.
இதுகுறித்து இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில பொதுச் செயலாளர் மற்றும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முகம்மது அபூபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 03.08.2020 அன்று திருச்சி சுந்தரம் மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
டாக்டர் விவேக் தலைமையிலான மருத்துவக் குழுவினர் தனி கவனம் செலுத்தி சிறப்பு சிகிச்சையளித்து வந்தனர். 24.08.2020 பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன் பூரண நலம் பெற்று இல்லம் திரும்பினார். கே.எம். காதர் மொய்தீன் உடல்நலம் குறித்து கேட்டறிந்து பிரார்த்தனை செய்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அனைவருக்கும் நன்றியினைத் தெரிவித்து கொள்கிறோம்.
இல்லம் திரும்பியுள்ள கே.எம். காதர் மொய்தீனை சிறிது காலத்திற்கு யாரும் நேரில் சந்திக்க வேண்டாமென கேட்டுக் கொள்கிறோம்". இவ்வாறு அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.