இந்திய சீன எல்லையில் சீன ராணுவத்தினரால் கொல்லப்பட்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரரின் இறுதிச்சடங்கில் பலரும் கலந்து கொண்ட நிலையில், உள்ளூரில் இருந்தும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தது குறித்தும், இது சம்பந்தமான அவரது கருத்தினை தாங்கியும், "ராணுவ வீரரின் இறுதிச்சடங்கைப் புறக்கணித்தாரா முன்னாள் அமைச்சர்..?" என்ற தலைப்பினில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதன் எதிரொலியாக நக்கீரனிடம் கூறியது போல், வீரமரணமடைந்த ராணுவ வீரரின் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தியும், குடும்பத்தினருக்கு நிதியுதவியும் வழங்கினார் முன்னாள் அமைச்சர் மணிகண்டன்.
லடாக் பகுதியில் இந்தியா ராணுவத்தைச் சேர்த்த 20 ராணுவ வீரர்கள் சீன ராணுவத்தினரால் சமீபத்தில் கொல்லப்பட்டதாகச் செய்தி வெளியாகியது. இதில் வீரமரணமடைந்த 20 வீரர்களில் ராமநாதபுரம் மாவட்டத்தினைச் சேர்ந்த திருப்பாலைக்குடி காவல் நிலைய எல்கைக்குட்பட்ட கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த பழனியும் ஒருவர் என்பதால் அக்கிராம மக்கள் மட்டுமின்றி தகவல் கேள்விப்பட்ட அனைவரும் சோகமயமாகினர். வீரமரணமடைந்த பழனியின் உயிரற்ற உடல் நேற்று முன்தினம் கடுக்கலூர் கிராமத்திற்குக் கொண்டு வரப்பட்டு முப்படை ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதில் மாவட்டத்திலுள்ள அதிகாரிகள் தொடங்கி சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய வேளையில், முன்னாள் அமைச்சரும், இந்நாள் ராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மணிகண்டன் மட்டும் மிஸ்ஸிங்.! இது சர்ச்சையை ஏற்படுத்திய வேளையில், "எனக்கு உடல் நிலை சரியில்லை. அதனால் தான் வரவில்லை. வேண்டுமென்றே புறக்கணித்தேன் என்பது தவறான செய்தி. ராணுவ வீரரின் தொண்டு அளப்பரியது. அதைப் போய் புறக்கணிப்பேனா..? உடல் நிலை சரியானதும் அவரது இல்லத்திற்குச் சென்று தேவையான நிதியுதவி வழங்கி, அவர்கள் குடும்பத்தை மேம்படுத்துவதே என் எண்ணம்." என்று நக்கீரனிடம் பதிலளிக்க செய்தி வெளியாகி மாவட்டத்திலுள்ள மக்கள் மத்தியில் பரப்பரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நேற்றைய தினம் கடுக்கலூரிலுள்ள ராணுவ வீரரின் நினைவிடத்திற்குச் சென்ற அதிமுக. கழக மருத்துவ அணி துணை செயலாளரும், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான மணிகண்டன் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியவர், வீரமரணமடைந்த குழந்தைகளை அருகினில் அழைத்து ஆறுதல் கூறினார். இதேவேளையில் ராணுவ வீரரின் மனைவி வானதிதேவியிடம் ரூ.2 லட்சத்தையும், அவரது தந்தை காளிமுத்துவிடம் ரூ.25 ஆயிரத்தையும் தனித்தனியே வழங்கியவர், "தமிழக அரசு கூறியது போல் ராணுவ வீரரின் மனைவிக்கு விரைவில் ஆசிரியர் பணி பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும்" எனவும் தெரிவித்தார்.