திருவண்ணாமலை நகரத்தில் உள்ள நகராட்சியால் நடத்தப்படும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 5 ஆயிரம் மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் திருவண்ணாமலையை சுற்றியுள்ள கிராமப்புறங்களை சேர்ந்த மாணவிகள் என்பது குறிப்பிடதக்கது. இந்த பள்ளியில் ஆண்டுவிழாவுக்கான போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் பள்ளியில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நவம்பர் 27ந்தேதி மாலை 3 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுயிருந்தது.
இதில் பரிசு வழங்க சிறப்பு அழைப்பாளராக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அழைக்கப்பட்டுயிருந்தார். அவரும் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு காலையே வந்து அரசின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டிருந்தார். திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விழா 3 மணிக்கு என்பதால் விழாவுக்கு அமைச்சர்கள் அதிகாரிகள் வருகிறார்கள் என்பதற்காக மதியம் 2.30 மணி முதல் திறந்தவெளி மைதானத்தில் அமர்த்திவைத்திருந்தனர். 3 மணிக்கு வரவேண்டியவர்கள் மாலை 4 மணியான பின்பும் வரவில்லை.
வழக்காக 4 மணிக்கு பள்ளி விடப்படும், ஆனால் விழா நடைபெறும் நாள் என்பதால் பள்ளி நேரம் முடிந்து பள்ளி நடைபெற்றது. மாணவிகள் யரையும் வீட்டுக்கு அனுப்பவில்லை. விழாவில் கலந்துக்கொள்ள வேண்டும் என அமர்த்திவைத்திருந்தனர். மாலை 4 மணியளவில் தூரல் போட அப்போதும் அவர்களை அப்படியே அமர்த்தி வைத்திருந்தனர் ஆசிரியைகள். 5 மணியானதும் அப்போதும் ஆட்சியாளர்கள் வரவில்லை.
மாலை 6 மணிக்கு தான் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் கந்தசாமி மற்றும் அதிகாரிகள் வந்தனர். விழா முடிய 7 மணிக்கு மேலானது. அதன்பின் பள்ளி வளாகத்திலேயே செய்தியாளர்களை சந்தித்தார் அமைச்சர். அதுவரை மாணவிகளை அனுப்பாமல் அங்கேயே அமர்த்திவைத்திருந்தனர் ஆசிரியைகள். 7. 20 மணிக்கு மேலே மாணவிகளை அனுப்பிவைத்தனர்.
இதுதான் நகரத்தில் உள்ள சமூக ஆர்வலர்களை கொதிக்க வைத்துவிட்டது. மாணவிகள் படிக்கும் பள்ளியில் விழா வைத்துவிட்டு 3 மணிக்கு வருகிறோம் எனச்சொல்லிவிட்டு 6 மணிக்கு வந்து 7 மணிக்கு விழாவை முடித்து மாணவிகளை வீட்டுக்கு அனுப்புவது எந்த விதத்தில் நியாயம் ?. திருவண்ணாமலையை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து வந்து படித்துவிட்டு செல்பவர்கள். இரவு 7.30 மணியளவில் பள்ளியில் இருந்து அனுப்பினால், அவர்கள் நடந்து சென்று பேருந்துநிலையத்தில் பேருந்து ஏறி வீட்டுக்கு செல்வது எவ்வளவு ஆபத்தானது. கிராமப்புறங்களுக்கு அந்த நேரத்தில் மாணவிகளுக்கு அரசு பேருந்து கிடைக்குமா ? அவர்கள் பாதுகாப்பாக செல்வார்களா? இதையெல்லாம் யோசிக்க தேவையில்லையா ? என கேள்வி எழுப்பினார்கள்.
நகரத்தில் மகளிர் மேல்நிலைப்பள்ளியை சுற்றியுள்ள தெருக்களில் காலை, மதியம், மாலை என ரோமியோக்கள் உட்கார்ந்து கொண்டு மாணவிகளை கிண்டல் செய்கிறார்கள், பின்னாலயே சென்று தொந்தரவு செய்வது, தினம் தினம் பார்க்கிறோம். இரவு நேரத்தில் அவர்களை பள்ளியில் இருந்து அனுப்பும்போது, அவர்களின் பாதுகாப்பு என்னவாவது என கேள்வி எழுப்பி வருத்தப்பட்டார்கள்.
வருங்காலத்தில் பள்ளியில் இப்படி விழா நடத்தும்போது அதிகாரிகள், ஆட்சியில் உள்ளவர்கள் நேரத்துக்கு சென்று, சீக்கிரமாக விழாவை முடித்து அவர்கள் பாதுகாப்பாக செல்ல தாங்கள் வழி அமைத்து தரவேண்டும் என்கிறார்கள்.