மக்காத பாலிதீன், பிளாஸ்டிக் பைகளால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதுடன் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. மலை மலையாய் குவியும் பிளாஸ்டிக், பாலித்தீன் பை கழிவுகளைத் தீயிட்டு எரிப்பதால் காற்று மாசு ஏற்படுகிறது. மற்றொரு பக்கம் கால்நடைகளும் இந்தப் பாலிதீன் பைகளைத் திண்பதால் அவற்றின் உயிருக்கே ஆபத்து ஏற்படுகிறது. அதனால் அனைத்து கடைகளிலும் பாலிதீன் பைகளைத் தடை செய்திருந்தனர். டீக்கடைகள் முதல், மளிகை, காய்கறி, மட்டன், மீன் கடைகள் உள்ளிட்ட கடைகளும் தடையை மீறியதால் பாலிதீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதங்களும் விதிக்கப்பட்டன.
ஆனால் தற்போது மீண்டும் பாலிதீன் கலாச்சாரம் தொடங்கியுள்ளதால், வீதிகளில் மலைபோல் குவிக்கப்பட்டு காற்றில் பறந்து விபத்துகளையும் ஏற்படுத்துகிறது. புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள ஒரு வீதியில் சுற்றிய ஒரு பசுமாடு, அங்கு குவிக்கப்பட்டிருந்த பாலிதீன் பை குப்பைகளிலிருந்து இரை தேடிய நிகழ்வு வேதனையாக இருந்தது. அந்த பாலிதீன் பைகளும் பசுவின் வாய்க்குள் சென்றது. இதனால் இதுபோன்ற கால்நடைகள் எந்த அளவுக்குப் பாதிக்கப்படும். இதேபோலத்தான் ஒவ்வொரு ஊரிலும் பாலிதீன் குப்பைகள் ஆக்கிரமித்துவருகிறது. இனி மழைக்காலம் வீதியில் வீசப்படும் பாலிதீன் கழிவுகள் தண்ணீரோடு கால்வாய்களில் அடைத்து சாக்கடை தண்ணீரும் கலந்து வீதிகளில் ஓடி பல்வேறு நோய்களைத் தரவுள்ளது. அதற்குள் மீண்டும் பாலிதீன் கலாச்சாரத்தை முடக்கினால் மழை நீரை, நிலத்தடி நீராக சேமிக்கலாம்.