‘உண்மையான பவர் எங்ககிட்டதான் இருக்கு..’ என்று காவல்துறையினரிடமே ஒரு காட்டு காட்டியிருக்கிறார்கள், மின்வாரிய ஊழியர்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகிலுள்ளது கூமாபட்டி. அங்கே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, மின்வாரிய ஊழியர் சைமன் என்பவர் தனது டூ வீலரில் ட்ரிபிள்ஸ் போயிருக்கிறார். ‘ஒரு வாகனத்தில் மூன்று பேரா?’ எனக்கேட்டு, அந்த வாகனத்தை காவல்துறையினர் நிறுத்தியுள்ளனர். அப்போது சைமன் தரப்பு “நீங்க மட்டும் டிரங்கன் டிரைவ் கேஸ் போட்டு ஜி.எச்.சுக்கு கூட்டிட்டு போறப்ப ட்ரிபிள்ஸ்தானே போறீங்க? போலீசுக்கு மட்டும் தனிச்சட்டமா?” என்று பதிலுக்கு எகிறியிருக்கின்றனர். அதனால் எரிச்சலான காவல்துறையினர், சைமனின் இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்து, கூமாபட்டி காவல் நிலையத்துக்கு கொண்டு போய்விட்டனர்.
‘போலீஸ் பவரை எங்ககிட்டயே காட்டுறீங்களா?’ என்று கடுப்பான மின்வாரிய ஊழியர்கள், உயரதிகாரி ஒருவரின் ஒத்துழைப்போடு, கூமாபட்டி காவல்நிலையத்தின் மின் இணைப்பை துண்டித்தனர். அதனால், காவல்நிலையப் பணிகள் பாதிக்கப்பட்ட நிலையில், கூமாபட்டி காவல்துறையினர், விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் முறையிட்டுள்ளனர். அதன்பிறகு, இரண்டு மணி நேரம் கழித்தே, காவல்நிலையத்துக்கு மின் இணைப்பு தந்துள்ளனர்.
நடந்த இந்த ‘ஏட்டிக்குப் போட்டி’ குறித்து, இருதரப்பு அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.