திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த திம்மாம்பேட்டை காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகங்களில் சாராயம் கடத்துவதாக போலீஸாருக்கு அப்பகுதி இளைஞர்கள் தகவல் கொடுத்தனர். இதனால் சாராயம் கடத்துபவர்களை பிடிக்க திம்மாம்பேட்டை காவல்நிலைய ஆய்வாளர் ஜெயலட்சுமி தலைமையில் போலீசார் ரகசிய விசாரணை நடத்தினர்.
அதோடு, செக் போஸ்ட்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். முக்கிய சாலைகளை தவிர்த்து, உள்சாலைகளில் ரோந்து பணியை தீவிரப்படுத்தினர். அப்போது, மலைப்பகுதியில் இருந்து இருசக்கர வாகனங்களில் கள்ளச்சாராயம் கடத்தி வந்த 8 பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். சாராயம் கடத்துவதற்கு பயன்படுத்திய 4 இருசக்கர வாகனங்கள் மற்றும் 200 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ச்சியாக கள்ளச்சாராயம் விற்பவர்களை காவல்துறை கைது செய்தாலும், குடிமகன்களுக்கு சாராயம் தேவை இருப்பதால் புதியது, புதியதாக கள்ளச்சாராயம் விற்பவர்கள், காய்ச்சுபவர்கள் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள். இது காவல்துறையை அதிர்ச்சியடைய செய்துள்ளது.