கட்டுமானத் தொழிலாளர் நலவாரியம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்ய கிராம நிர்வாக அலுவலர்களுக்கு லஞ்சம் கொடுக்கிறோம் என்று இளைஞர்களின் கேள்விக்கு தொழிலாளர் சங்க நிர்வாகி பேசிய ஆடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. லஞ்சம் வாங்கியவர்கள் மீதும் லஞ்சம் வாங்கிக் கொடுப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்ககோரி மக்கள் பாதை அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் முள்ளூர் ஊராட்சிக்கு வந்த ஒரு தொழிலாளர் சங்கத்தைச் சேர் பெண் பணியாளர் ஒருவர் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணியில் இருந்த பெண்களிடம் கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் ரூ. 550 செலுத்தி உறுப்பினராக சேர்ந்து கொண்டால் மாதாந்திர உதவித் தொகை கிடைக்கும். அதனால் அனைவரும் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, புகைப்படம் மற்றும் ரூ.550 உடன் வாருங்கள் என உதவித் தொகை பெற்றுத்தருவதாக கூறியதால் சுமார் 700 க்கும் மேற்பட்டவர்கள் குவிந்தனர்.
இது குறித்து உள்ளூர் இளைஞர்கள் சிலர் பல சந்தேகங்களை கேள்விகளாக எழுப்ப, வசூலில் இருந்த பெண் தொழிற்சங்க நிர்வாகிக்கு போன் செய்து இளைஞர்களிடம் பேச சொன்னார். அவுட் ஸ்பீக்கரில் மாற்றி ஒரு இளைஞர் சங்க நிர்வாகியிடம் பேசுவதை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர்.
அந்த உரையாடலில் நலவாரியத்தில்.. கடந்த மாதம் வரை விண்ணப்பம் எழுதி கொடுத்தால் போதும் ஆனால் தற்போது அனைத்தும் ஆன் லைனில் பதிவு செய்ய வேண்டும். அதற்கு விண்ணப்பம் மற்றும் படங்கள் போன்ற அனைத்தையும் ஸ்கேன் செய்யவும் பிறகு பிங்கர் பிரிண்ட் உள்பட ரூ.225 செலவாகும். விண்ணப்பத்திற்காக ரூ.175 செலுத்த வேண்டும். பிறகு புதுக்கோட்டையில் உள்ள 111 வி.ஏ.ஓக்களுக்கும் விண்ணப்பத்திற்கு ரூ. 100 வீதம் கொடுக்கனும்.
அதாவது வி.ஏ.ஓக்களுக்கு லஞ்சம் கொடுக்கனுமா? ரூ.100 அவர்களுக்கு லஞ்சமாக கொடுக்கிறீர்களா? அப்ப முள்ளூர் வி.ஏ.ஓவுக்கும் லஞ்சம் கொடுத்திருக்கீங்களா? என்று இளைஞர் கேள்வி எழுப்ப பெயர் குறிப்பிட்டு சொல்ல விரும்பல 111 வி.ஏ.ஓக்களுக்கும் கொடுக்கிறோம் என்கிறால் சங்க நிர்வாகி.
சரி உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் பயனடையும் நபர்களுக்கு நலவாரியத்தில் பயனடைய வாய்ப்பு இல்லையே பின்பு எப்படி கிராம மக்களிடம் விண்ணப்பமும் பணமும் வாங்குறீங்க.. உழவர் பாதுகாப்பு திட்டத்தில் இருப்பதை உறுதி செய்தீர்களா? அவர்களிடம் விளக்கி சொன்னீர்களா என்று கேள்வியும் எழுப்ப, மீண்டும் கிராம நிர்வாக அலுவலர்களையே குறைசொல்லிக் கொண்டிருந்தவர். கலைஞர் கொண்டு வந்த திட்டத்திற்கு எதிராக உழவர் பாதுகாப்புத் திட்டத்தை ஜெ. கொண்டு வந்தார். அதில் அதிமுகவினர் பலரையும் சேர்த்து வைத்துள்ளனர் என்று போகிறது அந்த உரையாடல்.
இது குறித்து மக்கள் பாதை பொறுப்பாளர் ஞானபாண்டியன் மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பி உள்ளார். அவற்றுடன் ஆதாரங்களுடன் கூடிய காணொளியும் இணைத்துள்ளனர். அந்த மனுவில் முறைகேடாக லஞ்சம் பெற்று மக்களை ஏமாற்றி நலவாரியத்தில் உறுப்பினராக்குவதாக விண்ணப்பங்களை பெற்றவர்கள் மீதும், இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து, ஏழை கிராம மக்களிடம் பெற்ற பணத்தை திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.