சேலம் அருகே, ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி - அரியானூர் சாலையில், தெட்டாம்பட்டி என்ற பகுதியில் சனிக்கிழமை (அக். 4) காலை சாலை ஓரமாக 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது. அவரை மர்ம நபர்கள் கொன்று வீசியிருப்பது தெரிய வந்தது.
இதைப்பார்த்த பொதுமக்கள், ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். டிஎஸ்பி உமாசங்கர், ஆய்வாளர் குலசேகரன் மற்றும் காவலர்கள் சம்பவ இடம் விரைந்து வந்து, சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். சடலம், உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கொலையுண்ட நபரின் தலையில் கத்தி அல்லது அரிவாளால் வெட்டப்பட்டதற்கான ஆழமான காயம் இருந்தது. சடலத்தின் அருகில் ஒரு மோட்டார் சைக்கிள் சாய்ந்து கிடந்தது.
தீவிர விசாரணையில், கொலையான நபர் சேலம் அன்னதானப்பட்டி சண்முகா நகரைச் சேர்ந்த சேகர் மகன் மோகன் (29) என்பது தெரிய வந்தது. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த அவரை வெட்டி படுகொலை செய்துள்ளனர்.
சடலம் அருகே கிடந்த மோட்டார் சைக்கிள் மோகனுடையது இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது. அதனால் கொலையாளிகள் மோகனை வேறு எங்கோ வைத்து தீர்த்துக்கட்டிவிட்டு, சடலத்தை தெட்டாம்பட்டி பகுதியில் வீசி இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.
சடலம் அருகே கிடந்த மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை வைத்தும் கொலையாளிகள் குறித்த விசாரணை நடந்து வருகிறது. அன்னதானப்பட்டியைச் சேர்ந்த ரவுடிகள் இந்த கொலையைச் செய்திருக்கலாம் என சந்தேகிக்கும் காவல்துறை, பெண் விவகாரத்தில் கொலை நடந்ததா? அல்லது தொழில் போட்டியால் கொலை நடந்ததா? என பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
கொலையான மோகனுக்கு ராஜகுமாரி என்ற மனைவி உள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. மேலும் மோகனுக்கு இன்றுதான் பிறந்த நாள் ஆகும். காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.