ஆயுதம் எடுத்தவன் ஆயுதத்தாலேயே சாவு என்பதனை உறுதிப்படுத்தும் விதமாக, பழிக்குப் பழியாக கொலை சம்பவங்கள் தமிழகமெங்கும் நாள்தோறும் அரங்கேறி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக ரவுடி ஒருவரை பழிதீர்க்க ஓட ஓட விரட்டி வெட்டப்பட்ட நிலையில், வங்கி ஒன்றின் பாதுகாவலரால் விரட்டிய ரவுடிகள் சுடப்பட்டு, காப்பாற்றப்பட்டுள்ளார் வெட்டுப்பட்ட ரவுடி.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆவரங்காடு கிராமத்தைச் சேர்ந்த முனியாண்டி மகன் தங்கராஜ். காவல்துறையினர் கண்காணிப்பில் உள்ள இவர் இன்று மானாமதுரை பஜார் சாலையில் நண்பர் ஒருவருடன் இணைந்து இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த பொழுது, மூன்று இருசக்கர வாகனங்களில் பிச்சை பிள்ளையனேந்தல் தமிழ்செல்வம், ஆவரங்காட்டை சேர்ந்த ஆண்டிசெல்வம், பூமிபாலன் மற்றும் சலுப்பன ஓடை மச்சக்காளை உள்ளிட்டோருடன் ஏழு பேர் கொண்ட குழு வாகனத்தை நிறுத்தி சராமரியாக வெட்டத் தொடங்கியது. இதில் தங்கராஜின் தலையில் ஹெல்மெட் அணிந்திருந்ததால் தலைக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. மாறாக உடலெங்கும் வெட்டுப்பட்ட நிலையில், உடன் வந்த நண்பருக்கும் பலத்த காயம் ஏற்பட உயிருக்குப் பயந்து அங்கிருந்து தப்பி ஓடத் தொடங்கி அருகில் முதல் தளத்தில் இயங்கி வந்த கனரா வங்கிக்கு சென்று தஞ்சமடைந்துள்ளார். தங்கராஜை துரத்தி சென்ற தமிழ்செல்வம் தலைமையிலான குழு வங்கியினுள்ளே சென்று வெட்டத் தொடங்கியிருக்கின்றது. அங்கிருந்த வங்கி செக்யூரிட்டி செல்வ நேரு எச்சரித்தும் கேளாததால் தமிழ்செல்வத்தின் காலை நோக்கி சுட்டுக் காயப்படுத்த அனைவரும் தப்பியோடியுள்ளனர். இதில் காயமடைந்த ரவுடி தமிழ்செல்வம் மானாமதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தங்கராஜோ சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
"ஒப்பந்ததாரராகவும், அமமுக மானாமதுரை மேற்கு ஒன்றியச் செயலாளராகவும் இருந்து வந்தவர் சரவணன். இவர் கடந்த மே 26-ஆம் தேதி காலை மானாமதுரை புறவழிச்சாலையில் நடைபயிற்சி சென்ற நிலையில் சரவணனை வெட்டிக்கொன்றனர் சிலர். இந்தக் கொலையில் தங்கராஜ் தலையிட்டிருக்கலாம் என அதற்குப் பழிவாங்கும் விதமாக இப்பொழுது செயல்பட்டிருக்கின்றது தமிழ்ச்செல்வம் தலைமையிலான டீம்." என மானாமதுரை டி.எஸ்.பி.தலைமையிலான போலீஸ் டீம் குற்றவாளிகளை தேடி வருகின்றது. பட்டப்பகலிலே நடந்துள்ள இச்சம்பவத்தால் மானாமதுரையில் பதற்றம் தொற்றியுள்ளது.