Skip to main content

எடப்பாடி நிகழ்ச்சிகளில் ஜேப்படி!-கோஷம் போடுபவர்களிடம் கைவரிசை!

Published on 19/09/2019 | Edited on 19/09/2019

முன்புபோல் கிடையாது. ஜெயலலிதா ரேஞ்சுக்கு தன்னை உயர்த்திக் காட்டிக்கொள்வதில் இப்போது ஆர்வமாக இருக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கவேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. அதுபோல், வழிநெடுகிலும் அதிக அளவில் காக்கிகளை நிறுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டுமென்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.  அதனால், வெளியூர் ஆட்களைத் திரட்டிவந்து கெத்து காட்டுகிறார்கள் அடிபொடிகள்.  

 

incident in chief minister function



இந்த விதத்தில் கூட்டம் சேர்க்கும்போது, சில ஜேப்படி திருடர்களும் ஊடுருவி கைவரிசை காட்டிவிடுகிறார்கள். இப்படித்தான் பெரியார் பிறந்தநாளான 17-ஆம் தேதி, ஜெமினி மேம்பாலம் அருகிலுள்ள பெரியார் சிலைக்கு மரியாதை செய்து, அதன் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியாரின் படத்திற்கு  மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள் முதல்வர் இ.பி.எஸ்.ஸும், துணை முதல்வர் ஓ.பி.எஸ்.ஸும். அப்போது, கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி தி.நகர் அதிமுக பிரமுகர் ஒருவரின் பக்கத்தில் நின்ற ஆசாமி, ரூ.16,000-ஐ பிக்பாக்கெட் அடித்தார். அதை அருகிலிருந்த ஒருவர் கவனித்துவிட்டார்.  அந்த நபரைக் கையும் களவுமாகப் பிடித்து காக்கிகளிடம் ஒப்படைத்தனர்.

முதல்வரும், துணை முதல்வரும் பெரியார் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு மலர் தூவியபோது, 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டிருந்தனர். அத்தனை கெடுபிடிகளையும் தாண்டி ஜேப்படி செய்த அந்த பலே ஆசாமியை,   தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்கு விசாரணைக்காகக் கொண்டு சென்றனர். அப்போது அந்த ஜேப்படி ஆசாமி “கட்சி கரை வேட்டி கட்டிக்கிட்டு கூட்டத்தோடு கூட்டமாக பலரும் கோஷம் போடுறப்ப.. நானும் கோஷம் போட்டுக்கிட்டே செல்போன், பணம்னு கைக்கு சிக்கியதை அபேஸ் பண்ணிருவேன்.” என்றிருக்கிறார்.

ஜெமினி மேம்பாலம் பெரியார் சிலை அருகில் தமிழக முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சியில்  ஜேப்படி செய்த முருகன் பிடிபட்டபோது “நம்ம கட்சி தலைமை அலுவலகத்திலும் இதேபோல் ரெண்டு பேரைப் பிடித்துக் கொடுத்தோம். இப்போதும், அதேமாதிரி ஒருவன் சிக்கியிருக்கிறான்.” என்று முணுமுணுத்துவிட்டுச் சென்றார் ஒரு அதிமுக தொண்டர்.  

தேனாம்பேட்டை போலீசார் நடத்திய விசாரணையில், தி.நகர் அதிமுக 114-வது வட்ட செயலாளர் சின்னையாவிடமிருந்து ரூ.16000-ஐ பிக்பாக்கெட் அடித்தவர் கோவை – சீத்தாநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர் முருகன் என்பது தெரிய வந்திருக்கிறது.

தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில், திரட்டப்படும் கூட்டத்தில் ஜேப்படி ஒருபுறம் நடக்கிறது என்பது எடப்பாடிக்குத் தெரியுமா? இதற்குமுன், அவருக்குத் தெரியாமல் பார்த்துக்கொண்ட காக்கிகள், முருகன் விஷயத்திலோ கைது நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். 

 

சார்ந்த செய்திகள்