வேதியல் துறை ஆராய்ச்சி படிப்பை படித்து வரும் ஜீவா என்பவர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தன்னுடைய ஆராய்ச்சி படிப்பை படித்து வருகிறார். தன்னுடைய சொந்த ஊரான ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து திருச்சியில் தங்கி தன்னுடைய பிஎச்டி படிப்பை படித்து வரும் அவர் நேற்று (11.02.2021) உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த மாணவரின் போராட்டம் குறித்து விசாரித்தபோது, அவர் நன்றாக படிப்பவர் என்பதும், தேசிய அளவிலான தேர்வுகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பதும் கேட் தேர்வில் அகில இந்திய அளவில் 76வது இடம் பிடித்தவர், நெட் தேர்விலும் தேர்ச்சி பெற்றவர் என்பதும் தெரிய வந்தது. பாரதிதாசன் பல்கலைகழகத்தில் எம்.எஸ்சி பயின்றுள்ளார்.
அவர் நல்ல ஒரு சிறந்த மாணவர் என்பதை தெரிந்துகொண்ட பேராசிரியர் தியாகராஜன், ஆராய்ச்சி படிப்பை தன்னிடம் படிக்குமாறு வலியுறுத்திய நிலையில், அந்த மாணவரும் அவரிடமே தன்னுடைய பிஎச்டி என்று சொல்லக் கூடிய ஆராய்ச்சிப் படிப்பை படிக்கத் துவங்கியுள்ளார். ஆராய்ச்சி படிப்பை துவங்கிய சில மாதங்களிலேயே தன்னுடைய வீட்டிற்குத் தேவையான சொந்தப் பணிகளைச் செய்வதற்கு அவரை பயன்படுத்தியுள்ளார். இருப்பினும் பேராசிரியர் என்பதால் அவர் உதவி செய்ததாக கூறியவர், அதுவே நாளுக்கு நாள் பழக்கமாகி தொடர்ந்து வீட்டு வேலைகளை மட்டுமே செய்ய தன்னை கட்டாயப்படுத்துவதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்ததால், தன்னை ஆராய்ச்சி படிப்பை விட்டு நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக மாணவர் குற்றம்சாட்டியுள்ளார்.
அதேபோல ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் அவர்கள் ஆராய்ச்சி செய்வதற்கு தேவையான மாதாந்திர தொகையை இதுவரை தனக்கு வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். இந்தப் பிரச்சனை குறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளதாகவும் அதற்கான விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரணையும் நடை பெற்றது, ஆனால் இதுவரை எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை.
எனவே பேராசிரியர் தியாகராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வேதியல் துறை ஆராய்ச்சி மாணவர் ஜீவா, பல்கலைக்கழகத்தில் உள்ள தன்னுடைய துறை முன்பாக அமர்ந்து உள்ளிருப்பு, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.