அருப்புக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவமனையை திறந்து வைத்தார் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி வருவாய்த்துறை அமைச்சர் தீவிரம் முயற்சியினால் பல்வேறு மருத்துவ கட்டமைப்புகள் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக அருப்புக்கோட்டை, ராஜபாளையம் ஆகிய இரண்டு இடங்களில் ஏற்கனவே இருந்த அரசு மருத்துவமனைகள் இன்றைக்கு அரசு தலைமை மருத்துவமனைகளாக தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வருவாய்த்துறை அமைச்சருடைய வேண்டுகோளை தமிழகம் முதல்வர் ஏற்று மாவட்டத்திற்கு ஒரு தலைமை மருத்துவமனை என்ற நிலை இருந்ததை மாற்றியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் உழைக்கும் மக்கள் கூடுதலாக இருக்கும் நிலையில் அமைச்சர் தீவிரமாக கேட்டு இரண்டு மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகள் விருதுநகருக்கு வந்திருக்கிறது. அதில் ஒன்று அருப்புக்கோட்டை. 30 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மருத்துவமனையை மேம்படுத்துவதற்கு உள்ள நடவடிக்கைகளை இன்று அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை என அங்கீகரிக்கப்பட்ட பெயர் பலகையை திறந்து வைத்திருக்கிறார்'' என்றார்.
'விதி மீறி செயல்படும் மருத்துவக் கல்லூரி நிர்வாகங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்' என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, ''எந்த மாதிரியான விதிகளை மீறி இருக்கிறார்கள் என்பதை பொறுத்துத்தான் நடவடிக்கை இருக்கும். அந்த வகையில் ஏதாவது விதிமீறல்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். சமீபத்தில் சித்த மருத்துவம் சம்பந்தமான ஒரு விதிமீறல் இருந்தது. உடனடியாக அதை மூடி சீல் வைத்திருக்கிறோம். அப்படி ஏதாவது இருந்து யாராவது தகவல் தெரிவித்தால், விதிகள் எந்த வகையில் மீறப்படுகிறது என்ற தகவல் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.