Skip to main content

"எனக்கு வேறு வழியே கிடையாது என்று சொன்னார்"- ஆளுநருடனான சந்திப்பு குறித்து முதலமைச்சர் பேச்சு!

Published on 16/03/2022 | Edited on 16/03/2022

 

"I said there was no other way I should send it to the President" - Chief Minister's speech on the meeting with the Governor!

 

இன்று (16/03/2022), தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், சென்னை, திருவான்மியூரில் நடைபெற்ற தி.மு.க.வின் முதன்மைச் செயலாளரும், தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் இல்லத் திருமண விழாவை தலைமையேற்று நடத்தி வைத்தார்.

 

பின்னர் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, "நினைவில் வாழும் அருமைச் சகோதரர் ராமஜெயம்- லதா தம்பதியினரின் குமாரன் விநீத் நந்தனுக்கும், சீனிவாசன்- கிருஷ்ணகுமாரி தம்பதியினரின் அருமை மகள் அக்‌ஷயா கௌசிக்கும் நம்முடைய அன்பான வாழ்த்துகளோடு இந்த மணவிழா நிகழ்ச்சி நிறைவேறியிருக்கிறது.

 

இந்த மணவிழா நிகழ்ச்சியில் பங்கேற்று மணவிழாவை நடத்தி வைத்து, அதேநேரத்தில் மணமக்களை வாழ்த்தும் ஒரு சிறப்பான வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. அந்த வாய்ப்பினை பெற்றமைக்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வாய்ப்பினை எனக்கு உருவாக்கித் தந்திருக்கும் நம்முடைய அன்பிற்குரிய நேருவுக்கும், அவருடைய குடும்பத்தாருக்கும் முதலில் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்.

 

நம்முடைய கட்சியின் முதன்மைச் செயலாளராகவும், அமைச்சராகவும் இருக்கும் நேரு தி.மு.க.வின் முன்னணி தளகர்த்தர்களில் ஒருவராக விளங்கிக் கொண்டிருக்கிறார் என்று எல்லோரும் சொன்னார்கள். திருச்சி என்றால் அது நேருதான்! நேரு என்றால் அது திருச்சிதான்! அதேபோல் மாநாடு என்றால், அதுவும் நேருதான்!

 

திருப்புமுனை மாநாட்டை திருச்சியில் பலமுறை நடத்திக் காட்டித் தலைவர் கலைஞருடைய உள்ளத்தில் ஒரு சிறப்புக்குரிய இடத்தை பெற்றவராக விளங்கிய தீரர் நம்முடைய நேரு அவர்கள்! அவருடைய இளவல் நம்முடைய நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும், நினைவில் வாழ்ந்து கொண்டிருக்கும் ராமஜெயம் அவர்களுடைய இல்லத்தில் இந்த மணவிழா நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

 

மேடையில் இருக்கும் மணமக்களையும், இந்த அரங்கத்திற்கு வருகை தந்து வாழ்த்திக் கொண்டிருக்கும் உங்களையும் பார்க்கிறபோது, எனக்கு உள்ளபடியே மகிழ்ச்சி அதிகமாக இருந்தாலும், அதேநேரத்தில் என் நெஞ்சில் ஒரு ஏக்கம், ஒரு கவலை இருந்து கொண்டிருக்கிறது. நேருவும் அதே உணர்வோடுதான் இங்கு இருக்கிறார்.

 

இந்த இடத்தில் ராமஜெயம் இல்லையே என்ற ஏக்கம் நேருவிற்கு மட்டுமல்ல, அவருடைய குடும்பத்திற்கு மட்டுமல்ல, நம் அனைவருக்கும் இருக்கிறது. என்னுடைய அருமைத் தம்பி திருச்சியினுடைய தீரனாக விளங்கிய ராமஜெயம், இங்கு இல்லையே என்ற வருத்தம் நமக்கு இருந்தாலும், அந்த வருத்தத்தை எல்லாம் போக்கும் வகையில் நம்முடைய நேரு பொறுப்பேற்றுக் கொண்டு தன்னுடைய தம்பியின் அருமை மகனுக்கு இந்த மணவிழா நிகழ்ச்சியை, கட்சியின் மாநாடு போல் நடத்திக் கொண்டிருக்கிறார் என்பது நமக்கெல்லாம் நன்றாகத் தெரிகிறது.

"I said there was no other way I should send it to the President" - Chief Minister's speech on the meeting with the Governor!

 

திருச்சியில் நம்முடைய ராமஜெயத்தோடு நெருக்கமாக இருந்தவர்கள், அவரை “எம்.டி. – எம்.டி.” என்றுதான் அழைப்பார்கள். ‘எம்.டி.’ என்பது மேனேஜிங் டைரக்டர் மட்டுமல்ல, அனைவரையும் வசப்படுத்தும் மேக்னடிக் டைரக்டராகவும் அவர் விளங்கியிருக்கிறார். அண்ணன் நேரு கிழித்த கோட்டை ராமஜெயம் தாண்ட மாட்டார். அவர் சொல்லுக்குக் கட்டுப்பட்ட ஒரு தம்பியாக விளங்கியவர் நம்முடைய ராமஜெயம்.

 

அது நேருவாக இருந்தாலும் சரி, ராமஜெயமாக இருந்தாலும் சரி, தம்பி ரவி அவர்களாக இருந்தாலும் சரி, கட்சிக்காக உழைப்பதில் எதையும் எதிர்நோக்கி உழைத்ததில்லை. கட்சியின் வளர்ச்சிக்காக, தலைவருடைய புகழுக்காக உழைத்தவர்கள்; இன்றைக்கும் உழைத்துக் கொண்டிருப்பவர்கள்.

 

பல நேரங்களில் பல துன்பங்களை, பல தொல்லைகளை அனுபவித்தவர்கள்தான்; அதை எதிர்கொண்டவர்கள்தான். கட்சிக்காக உழைத்த குடும்பங்கள் உண்டு. அதில், முதல் குடும்பம் எந்தக் குடும்பம் என்று என்னைக் கேட்டால், அது நேருவின் குடும்பமாகத்தான் நிச்சயமாக இருக்கும். ராமஜெயத்தை நாம் இழந்தபோது, நேருவுக்கும், அவருடைய குடும்பத்தினரும் அடைந்த துன்பம் போலதான், நம்முடைய தலைவர் கலைஞரும் கண்ணீர்விட்டு அழுதார்கள்; கவலைப்பட்டார்கள்.

 

அப்போது தலைவர் கலைஞர் முரசொலியில் எழுதிய இரங்கல் குறிப்பில், “நேருவின் தம்பி ராமஜெயத்தை நேரில் நின்று எதிர்க்க முடியாமல் எப்படியோ கடத்திக் கொண்டு போய் வீழ்த்திவிட்டது வீணர்கூட்டம். சிலையாய் நிற்கிறாய் நீ; புகழ் மலையாய் நிலைத்திருக்கும் உன் பெயர்;” என்று எழுதினார். அவரது வரிகள் வீண்போகாது என்பதன் அடையாளம்தான் இன்றைய தினம் ராமஜெயத்தின் இல்லத்தில் நடைபெறும், இந்தத் திருமணத்திற்கு ஆயிரக்கணக்கில் ஏராளமானோர் வந்து இதில் கலந்துகொண்டு அந்தக் குடும்பத்தின் செல்வங்களை வாழ்த்திக் கொண்டிருக்கிறீர்கள்.

 

சிலையாய் அல்ல; புகழ் மலையாய் ராமஜெயத்தின் புகழும் சேர்ந்து விநீத் நந்தன்- அக்‌ஷயா கௌசிக் இருவரையும் இன்றைக்கு வாழ்த்திக் கொண்டிருக்கிறது. நம்முடைய தலைமைக் கழகத்தின் சார்பில் - தலைவர் கலைஞர் அவர்கள் எண்ணுகிற உணர்வை நிறைவேற்றவேண்டும் என்று சொன்னால், அதை யார் மூலம் செய்யலாம் என்று பேசிக் கொண்டிருக்கும்போது, நேரு அவர்களை கூப்பிடுங்கள் என்றுதான் தலைவர் பலமுறை கூப்பிட்டிருக்கிறார்.

 

அண்மையில்கூட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பின் தேர்தல் நடைபெற்றது. இங்குகூட வாழ்த்தியபோது நம்முடைய கூட்டணிக் கட்சியில் இருக்கும் பல்வேறு தலைவர்கள் எல்லாம் பேசுகிறபோது, நேருவைப் புகழ்ந்து பேசினார்கள். ஆனால் அவர்கள் மனதிற்குள் என்ன கோபத்தில் இருப்பார்கள் என்று எனக்கு தெரியும். ஏனென்றால் பேச்சுவார்த்தைக்கு அவரையும், வேலு போன்றவர்களையும்தான் நியமித்து, அந்தப் பணியை முடிக்கச் சொன்னேன்.

 

ஏனென்றால் நேரு அவர்களிடம் கொடுத்தால் நிச்சயமாக நிறைவேறும் என்ற நம்பிக்கை எனக்கு மட்டும் அல்ல, எல்லோருக்கும் உண்டு. “தமிழில் அழகாகப் பேசுவார்; அதைவிட இன்னும் பல மொழிகளிலும் பேசுவார்” என்று இங்கு முத்தரசன் அவர்கள் பேசுகிறபோது சொன்னார். அது எங்களுக்கும் தெரியும். இங்கு இருக்கும் அனைவருக்கும் தெரியும். இங்கு இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, நம்மைப்போன்ற முக்கியஸ்தர்களுக்கு மட்டுமல்ல, இங்கு இருக்கும் அனைவருக்கும் தெரியும்; நாட்டுக்கே தெரியும்; உலகத்திற்கே தெரியும்; அவர் என்ன பேசுவார் என்று!

 

இன்றைக்குத்தான் கொஞ்சம் அமைதியாக இருக்கும் காட்சியை நான் பார்க்கிறேன். பட பட பட படவென்று இருப்பார். அங்கு ஓடுவார்; இங்கு ஓடுவார்; ஒரு இடத்தில் நிற்க மாட்டார். அதற்கு என்ன காரணம்? ராமஜெயம் இல்லையே என்ற அந்த காரணம்தான் இன்றைக்கு அவரை அமைதியாக நிற்க வைத்துக்கொண்டிருக்கிறது. நீங்கள் கவலைப்படாதீர்கள்; நாங்கள் இருக்கிறோம் உங்களுக்கு! எல்லா இடத்திலும் வேகமாகத்தான் பேசுவார். நல்ல காரியமாக இருந்தாலும் சரி; கெட்ட காரியமாக இருந்தாலும் சரி!

 

நம்முடைய செல்வம்தான் அடிக்கடி சொல்வார். நேரு எப்போதும் கோபமாகத்தான் இருப்பார். மனைவியைக் கொஞ்சுகிறபோதுகூட கோபமாகத்தான் கொஞ்சுவார் என்று சொல்வார். அந்த அளவிற்கு நம்முடைய நேரு அவர்கள் ஒரு குடும்பப் பாச உணர்வோடு எல்லோரிடத்திலும் அன்போடு பழகக்கூடியவர். அவருடைய அருமைத் தம்பி ராமஜெயம் அவர்களுடைய இல்லத்தில் நடைபெறும் இந்த திருமணத்தில் நாமெல்லாம் கலந்துகொண்டு இன்றைக்கு மணமக்களை வாழ்த்தி கொண்டிருக்கிறோம்.

 

நேற்றைய தினம் நமக்கு ஒரு செய்தி; முதல்கட்டமாக வெற்றிச் செய்தி கிடைத்திருக்கிறது. அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஏழை, எளிய, நடுத்தர மாணவர்களின் கல்விக் கனவை சிதைக்கும் நீட் தேர்விற்கு விலக்கு பெற வேண்டும்; அதற்குச் சட்ட முன்வடிவைச் சட்டமன்றத்தில் இயற்றி நாம் ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். பல மாதங்கள் அது கிடப்பில் போடப்பட்டிருந்தது. அதற்குப் பிறகு திடீரென்று ஒருநாள் அதைத் திருப்பி அனுப்பி வைத்துவிட்டார்கள்.

 

அதனால் உடனடியாக அடுத்து சட்டமன்றத்தைக் கூட்டி மீண்டும் ஒரு தீர்மானத்தைப் போட்டு, மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். இது நேற்று வரையில் எங்களுக்கு என்ன நிலையில் இருக்கிறது என்ற செய்தி கிடைக்கவில்லை. அதனால் நேற்றைய தினம் நான், நம்முடைய அண்ணன் துரைமுருகன், பொன்முடி, தலைமைச் செயலாளர் மற்றும் அதிகாரிகள் எல்லாம் ஆளுநரைச் சந்தித்து அந்தக் கோப்பைப் பற்றி விசாரித்தோம்.

 

விசாரித்தபோது அவர் என்ன சொன்னார் என்றால், ‘எனக்கும் சட்டம் தெரியும்; இரண்டாவது முறை நான் அதைத் திருப்பி உங்களுக்கு அனுப்ப முடியாது. நான் ஜனாதிபதிக்குத்தான் அனுப்பி வைக்க வேண்டும் வேறு வழி கிடையாது’ என்று சொன்னார். எனவே முதற்படியில் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம். இன்றைக்கும் சொல்கிறேன், விரைவில் அந்த நீட் தேர்வில் இருந்து இந்த நாடு நிச்சயம் விடுதலை பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

 

நேற்றைக்குக் கூட நாடாளுமன்றத்தில் நம்முடைய நாடாளுமன்றக் குழுவின் தலைவர் டி.ஆர்.பாலு, இதுபற்றி விளக்கமாக, விரிவாகப் பேசி, அங்கு இருக்கும் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். அது இன்றைக்குப் பத்திரிகைகளில் செய்திகளாக வந்திருக்கிறது. அப்படிப்பட்ட நிலையில் இன்றைக்கு இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. எனவே இந்த ஆட்சிக்கு, இந்த ஆட்சியின் அமைச்சரவையில் இடம் பெற்று, மிகச் சிறப்பாக பணியாற்றி, இந்த ஆட்சிக்குப் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும் அமைச்சர்களில் ஒருவராக, நேரு அவர்கள் விளங்கிக் கொண்டிருக்கிறார்.

 

எனவே அவருடைய இல்லத்தில் நடைபெறும் இந்த மணவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகின்றபோது உங்களோடு சேர்ந்து நானும் பெருமைப்படுகிறேன். புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லியிருக்கும், “வீட்டிற்கு விளக்காக, நாட்டிற்குத் தொண்டர்களாக” இருந்து மணமக்கள் வாழுங்கள்... வாழுங்கள்... வாழுங்கள்... என்று மனதார வாழ்த்தி விடைபெறுகிறேன். நன்றி.. வணக்கம்!" இவ்வாறு முதலமைச்சர் பேசினார். 

 

 

சார்ந்த செய்திகள்