தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான 13 பேரின் வீடுகளுக்கு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சென்ற நடிகர் விஜய், 13 பேரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொன்னதோடு, தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு தலா ரூபாய் ஒரு லட்சம் நிதி உதவி வழங்கினார்.
இரவு 11 மணி அளவில் மில்லர்புரம் காலனியில் உள்ள பலியான கந்தையா வீட்டுக்கு வந்தார். அவரது மனைவி ஜெயலட்சுமி, மகன் ஜெகதீசன் மற்றும் உறவினர்களை சந்தித்தார். ஜெயலட்சுமிக்கு ஆறுதல் கூறிய விஜய், எப்படி சம்பவம் நடந்தது என்று கேட்டார்.
''ஊர்வலத்தில் கலவரமுன்னு கேள்விப்பட்டு, என் கணவருக்கு போன போட்டேன். அப்போ போனை எடுத்து, 3வது மைல் தாண்டியதாக சொன்னார். அவரிடம், கலவரமாக இருக்கு போகாதீங்க, திரும்பி வந்திருங்கன்னு சொன்னேன். வந்துருவேன்னு சொன்னவருக்கு, கொஞ்ச நேரம் கழிச்சி போன் போட்டேன். ரிங் போச்சு, ஆனா போன எடுக்கலை. போலீஸ் துப்பாக்கிச் சூட்டுல செத்தவங்க பெயரை சொன்னப்ப, கந்தையான்னு என் புருஷன் பேரை சொன்னத கேட்டு பதறி அடிச்சு ஓடினோம். நெஞ்சில குண்டு பாய்ஞ்சு செத்தவர, தார்பாய் போட்டு மூடியிருந்தாங்க.
எனக்கு வயசாச்சு, எனக்கு ஒரே மவன். 18 வயசு. புத்திசுவாதீனமில்லாம இருக்கான். என் புருஷன் வேலை பாத்துத்தான் குடும்பம் ஓடுச்சு. இப்ப அதுவும் போயிடுச்சியான்னு சொன்னேன். அவர் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து இது ஒரு உபகாரமா வைச்சுகோங்கன்னு சொன்னாரு. அப்ப அவருகிட்ட நானு, என் பையனுக்கு 18 வயதாச்சு, புத்திசுவாதீனமில்லாம இருக்கான். அவனை குணப்படுத்த எனக்கு வழி தெரியல. நீங்க பாத்து உதவி செஞ்சீங்கன்னா நல்லா இருக்கும்முன்னு சொன்னப்ப, அதுக்கான நல்ல மனநல டாக்டர ஏற்பாடு பண்ணுறேன். கவலைப்படாதீங்கன்னு சொல்லி இந்த நம்பருக்கு சொல்லுங்கன்னு போன் நம்பரு கொடுத்தாரு. சென்னைக்கு போயி நான் உடனே ஏற்பாடு பண்றதா சொன்னாரு. அவர் சொன்னது எங்களுக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருக்கு'' என கண்ணீரோடு கூறினார் கந்தையா மனைவி ஜெயலட்சுமி.