கடந்த வாரம் ரிசார்ட் உரிமையாளருடன் சேர்ந்து கணவனை மனைவியே கொன்று புதைத்த சம்பவம் இடுக்கி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சாந்தம்பாறை அருகே கழுத்துக்குளமேடு பகுதியைச் சேர்ந்தவர் ரிஜோஷ். இவருக்கு வயது 37. இவருடைய மனைவி லிஜி. இவருக்கு வயது 29. அதே பகுதியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார் ரிஜோஷ். கணவன், மனைவி இருவரும் ஒன்றாக ரிசார்ட் அருகிலிலேயே வசித்து வந்துள்ளனர். அப்போது ரிசார்ட் உரிமையாளருக்கும், லிஜிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்பு இருவரும் நெருக்கமாக பழகியுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 31 ஆம் தேதி முதல் ரிஜோஷை காணவில்லை என்று அவரது உறவினர்கள் அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தனர். பின்பு விசாரித்ததில் ரிசார்ட் உரிமையாளருக்கும், லிஜிக்கும் இடையே தொடர்பு இருந்ததை போலீஸார் உறுதிப்படுத்தினர். பின்பு இவர்களை பிடிக்க போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது ரிசார்ட் அருகே இருக்கும் மழை நீர் சேகரிப்பு தொட்டி இருக்கும் இடத்தில் புதிதாக மண் போட்டு நிரப்பப்பட்டு இருந்தது தெரியவந்தது. அந்த இடத்தை போலீஸார் தோண்டிய போது ஒரு சாக்கு மூட்டை இருப்பதை கண்டுபிடித்தனர். பின்பு அந்த சாக்கு மூட்டையை பார்த்த போது ஒரு ஆண் சடலமாக கிடந்துள்ளார். விசாரணையில் அது ரிஜோஷ் என்று போலீஸார் உறுதிப்படுத்தினர். மேலும் அப்போது ரிசார்ட் உரிமையாளர் வாசிம் அப்துல் காதரும் (27), லிஜி மற்றும் அவருடைய இரண்டு வயது குழந்தையும் காணாமல் போயுள்ளனர். இதனால் போலீஸாருக்கு அதிக சந்தேகம் வந்துள்ளது.
இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. தலைமறைவான ரிஜோஷின் மனைவி லிஜியும், அவருடன் சென்ற வாசிமும் மும்பையில் உள்ள ஒரு விடுதியில் விஷம் அருந்திய நிலையில் மீட்கப்பட்டது தெரியவந்தது. இதற்கிடையே இருவரும் சேர்ந்து தங்களுடன் அழைத்துச்சென்ற இரண்டரை வயது குழந்தைக்கும் விஷம் கொடுத்து கொன்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குழந்தையின் உடல் தற்போது மும்பையில் கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டிருக்கிறது. விஷம் குடித்த லிஜி மற்றும் வாசிம் ஆகிய இருவரும் மருத்துவ சிகிச்சைப்பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் குழந்தையுடன் தந்தை ரிஜோஷ் கடைசியாக எடுத்த புகைப்படம் போலீஸ் தரப்பால் வெளியிடப்பட்டிருக்கிறது. அந்தப் புகைப்படம் காண்போரை கலங்கச் செய்கிறது. இறந்த குழந்தை, ரிஜோஷ் மற்றும் லிஜிக்கு தம்பதிக்கு பிறந்த மூன்றாவது குழந்தை என்பதாகும்.