நாடு முழுவதும் ஒவ்வொரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தமிழ்நாடு, மணிப்பூர், உள்ளிட்ட 102 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து, இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. அடுத்து வரவிருக்கும் மூன்றாம், நான்காம் கட்டத் தேர்தலுக்காக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் மூன்றாம் கட்டத் தேர்தல் நாளை (07-05-24) கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்களில் நடைபெறவிருக்கிறது.
அந்த வகையில், மொத்தம் 42 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்கத்தில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜ.க என அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அதன்படி, சில தினங்களுக்கு முன்பு மேற்கு வங்கத்தில் பா.ஜ.க வேட்பாளரை ஆதரித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர், “கவலைப்படாதீர்கள். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) நம்முடையது. அது நம்முடனே இருக்கும். இந்தியாவின் வளர்ந்து வரும் சக்தி, கௌரவம் மற்றும் பொருளாதார முன்னேற்றம் ஆகியவை PoK மக்கள் இந்தியாவில் சேர விரும்புவதற்கு வழிவகுக்கும்” என்று கூறினார்.
இந்த நிலையில், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சுக்கு ஜம்மு காஷ்மீரின் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா எதிர்வினையாற்றினார். இது குறித்து அவர் கூறுகையில், “பாதுகாப்பு அமைச்சர் அவ்வாறு சொன்னால் அதை அவர் செய்யட்டுமே. யார் தடுத்தது? ஆனால் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், பாகிஸ்தான் கையில் வளையல் அணிந்திருக்கவில்லை. அதில் அணுகுண்டுகள் உள்ளன, துரதிர்ஷ்டவசமாக, அந்த அணுகுண்டு நம் மீது விழும்” என்று கூறினார்.