
மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு நடத்தக்கூடாது என வலியுறுத்தி ஏற்கனவே கடந்த 6 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் இன்று கேள்வி நேரத்தின் மீதான விவாதத்தின் பொழுது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வை ரத்து செய்யக்கோரி தனித்தீர்மானத்தை முன்மொழிந்தார்.
இந்த தீர்மானத்தின் முன்மொழிவை தமிழக வாழ்வுரிமை கட்சி, கொமதேக, மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. தமிழக எதிர்க்கட்சியான அதிமுகவும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவளித்துள்ள நிலையில் இந்த தீர்மானத்தை எதிர்த்து பாஜக சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தது. பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், கேரள மாநிலத்தில் ஒரு மத்திய பல்கலைக்கழகம் இருக்கிறது. கம்யூனிஸ்ட்டுகள் ஆளும் அந்த மாநிலத்தில் இதுவரை எந்த எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதற்குள் நான் போக விரும்பவில்லை. முதல்வர் கொண்டுவந்துள்ள தீர்மானத்தில் கீழேயே இருக்கிறது மாநில அரசு பல்கலைக்கழகங்கள், தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் தேவைப்பட்டதால் நுழைவுத்தேர்வை வைத்துக்கொள்ளலாம் என்று'' என்றார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ''அவருக்கு தெரியாதது அல்ல. நீட் வரும்பொழுதும் இப்படிதான் சொன்னார்கள். தமிழகம் விரும்பினால் கொண்டுவரலாம் என்று கலைஞர் இருக்கும்பொழுது. நீட் வராமல் நாங்கள் தடுத்துக்கொண்டிருக்கிறோம். நீங்க இப்படித்தான் ஆரம்பிப்பீங்க... விரும்பினால்'னு ஆரம்பிச்சு அப்புறம் புதிய கல்விக்கொள்கை என்றெல்லாம் சொல்லி கம்பல்சரி பண்ணுவீங்க... அதற்காகத்தான் தமிழக முதல்வர் இந்த தீர்மானத்தை வாசித்திருக்கிறார். எல்லாம் மாநிலமும் இதனை பின்பற்றவேண்டும் என்ற உணர்வோடு உருவாக்கி இருக்கிறார்'' என்றார்.
அதனைத்தொடர்ந்து பாஜக வெளிநடப்பு செய்த நிலையில் பாஜகவை தவிர்த்து மற்ற அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுக்கு எதிரான தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.