காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏவுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் 14ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதனால், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 8ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.
இந்த இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 10.01.2025 அன்று தொடங்கியது. 17/01/2025 அன்று வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது. அதில், திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் மா.கி.சீதாலட்சுமி ஆகியோர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். இந்த தேர்தலில் அ.தி.மு.க, பா.ஜ.க தே.மு.தி.க, த.வெ.க ஆகிய கட்சிகள் போட்டியிடாமல் புறக்கணித்துள்ளனர்.
வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கான கால அவகாசம் இன்று (20-01-25) மாலை 3 மணியுடன் முடிவடைந்த நிலையில், ஈரோடு இடைத்தேர்தலில் எத்தனை வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் என்ற விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட 47 பேர் களம் காண்கின்றனர். இந்த தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த 8 பேர் தங்கள் மனுவை திரும்ப பெற்றுள்ளனர்.
இந்த இடைத்தேர்தலில், இறுதி வேட்பாளர் பட்டியலுடன் சின்னமும் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. ஒரே சின்னத்தை சுயேட்சைகள் இருவர் கேட்கும் பட்சத்தில் குலுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.