நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடரானது வருகிற டிசம்பர் 22 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கூட்டத் தொடரின் அலுவல்கள் நேற்று (13-12-23) வழக்கம்போல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, நாடாளுமன்ற மக்களவைக்கு பார்வையாளர்களாக வந்திருந்த இரண்டு நபர்கள் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மற்றும் திருமண கொண்டாட்டங்களில் பயன்படுத்தப்படும் வண்ண புகையை உமிழும் பட்டாசு போன்ற பொருட்களை எடுத்து அவை முழுக்க வீசினர். மேலும், 'சர்வாதிகாரம் கூடாது' என அந்த இருவரும் முழக்கங்களை எழுப்பியபடி, அவைக்குள் தாவிக் குதித்து தப்பியோட முயன்றனர்.
அப்போது, நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த பாதுகாவலர்களும் அங்கிருந்த எம்பிக்களும் சுற்றி வளைத்து அந்த இரு நபர்களையும் பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் நடைபெற்றுக் கொண்டிருந்த அதே சமயத்தில் நாடாளுமன்றத்துக்கு வெளியே இருந்த இரண்டு பெண்களும் வண்ண புகையை வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக, இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டு பெண்களையும் போலீசார் கைது செய்தனர். நாடாளுமன்றத் தாக்குதல் நினைவு தினமான நேற்று இருவர் அத்துமீறி நுழைந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த சூழலில், இன்று (14-12-23) மக்களவை மற்றும் மாநிலங்களவை கூடியது. அப்போது, மற்ற அவை நடவடிக்கைகளை ஒத்தி வைத்துவிட்டு பாதுகாப்பு பிரச்சனை தொடர்பாக விவாதிக்க வேண்டும் எனவும், இந்த சம்பவம் குறித்து அமித்ஷா விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், அவர்களுடைய கோரிக்கை இரு அவைகளிலும் ஏற்கப்படாததால் எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து கூச்சல் நிலவியதால், அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
அதன் பின்னர், 2 மணிக்குப் பிறகு இரு அவைகளும் மீண்டும் கூடின. அப்போது மக்களவையில் தமிழக எம்.பி.க்களான கனிமொழி, மாணிக்கம் தாகூர், சு. வெங்கடேசன், நடராஜன் உள்ளிட்டோர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவை நடவடிக்கைக்கு இடையூறு செய்யும் வகையில் செயல்பட்டதாகக் கூறி மக்களவை உறுப்பினர்களான கனிமொழி, மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன், சுப்பராயன், ஸ்ரீகந்தன், எஸ்.ஆர். பார்த்திபன், ஜோதிமணி, ஹைபி ஈடன், டீன் குரியாகோஷ், டி.என். பிரதாபன், ரம்யா ஹரிதாஸ் உள்ளிட்ட 14 எம்.பி.க்கள், மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்த 1 எம்.பி என 15 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் உள்ளே இருந்து போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் 15 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தள பதிவில், “திமுக எம்.பி. கனிமொழி உட்பட 15 எதிர்க்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது. பாஜக தலைமையிலான மத்திய அரசின் சகிப்புத்தன்மையற்ற அணுகுமுறை கண்டிக்கத்தக்கது. எம்.பி.க்களின் கருத்துச் சுதந்திரத்தை நசுக்குவது நாடாளுமன்றத்தில் புதிய விதிமுறையா? ஜனநாயகக் கோவிலில் பாதுகாப்பு மீறலுக்கு பதில் தேடும் மக்கள் பிரதிநிதிகள் ஏன் தண்டிக்கப்படுகிறார்கள்? 15 எம்.பி.க்களின் இடைநீக்கத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். பாராளுமன்றம் விவாத மேடையாக இருக்க வேண்டுமே தவிர எதிர்க்கட்சிகளின் கருத்து சுதந்திரத்தை பறிப்பதாக இருக்கக் கூடாது” எனத் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.