ஓசூர் நகரில் பகல் நேரங்களில் வீடுகளை நோட்டமிட்டு, இரவு நேரங்களில் வீடு புகுந்து திருடும் கொள்ளையர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து அரை கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, திருட்டு நகைகளை வாங்கியதாக அடகு கடைக்காரர்கள் நால்வரும் பிடிபட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், தமிழகம்- கர்நாடகா எல்லையில் அமைந்துள்ளது. பெரும்பாலும் தனியார் தொழிற்சாலைகள், அரசு தொழிற்பேட்டைகள் நிறைந்த பகுதி என்பதால், வெளிமாவட்டங்களைச் சேர்ந்த பலர் ஓசூர் நகரில் பணி நிமித்தமாக குடியேறி உள்ளனர். மேலும், இரு மாநில எல்லையில் அமைந்துள்ளதால் திருட்டு, வழிப்பறி குற்றங்களும் அடிக்கடி நிகழ்கின்றன. குற்றங்களில் ஈடுபடும் நபர்கள், எளிதில் கர்நாடகா மாநிலத்திற்குள் பதுங்கி விடுவதும் உண்டு.
இந்நிலையில் சமீப காலமாக ஓசூரில் நகர், புறநகர், சிப்காட், மத்திகிரி உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து திருட்டு, வழிப்பறி, வீடு புகுந்து கொள்ளை என அடுத்தடுத்து சம்பவங்கள் அரங்கேறி வந்தன. இந்த குற்றச் சம்பவங்களில் ஒரே கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகித்து வந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் இதுபற்றி காவல்துறையில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் ஓசூர், மத்திகிரி, சிப்காட் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். கொள்ளையர்கள் குறித்து முக்கிய தகவல்கள் கிடைத்தன. அதன்படி, கர்நாடகா மாநிலம் ஆனெக்கல் பகுதிக்குச் சென்று சீனிவாசன் என்பவரை கைது செய்தனர். அவர் அளித்த தகவலின்பேரில் பன்னார்கட்டா பகுதியைச் சேர்ந்த மதுசூதனன் என்பவரை கைது செய்தனர்.
அவர்களிடம் காவல்துறையினர் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் அளித்த வாக்குமூலம்: ''ஓசூரில் பகல் நேரங்களில் வீடுகளை நோட்டமிடுவோம். ஆள் நடமாட்டம் இல்லாத, நீண்ட நாள்களாக பூட்டிக்கிடக்கும் வீடுகளாக குறி வைப்போம். இரவு வீட்டின் உள்ளே சென்று கைவரிசை காட்டுவோம். வீடுகளில் கொள்ளையடிக்க முடியாத நேரங்களில், நடந்து செல்வோரிடம் வழிப்பறியில் ஈடுபடுவோம். இதுபோல் நிறைய நகைகளை திருடியிருக்கிறோம். திருடிய நகைகளை ஓசூர், உத்தனபள்ளி அத்திமுகம் பகுதிகளில் உள்ள அடகு கடைகளில் விற்பனை செய்வோம். நகைகளை விற்பனை செய்ய அதன் உரிமையாளர்கள் எங்களுக்கு உதவியாக இருந்தனர்,'' என்றனர்.
அவர்கள் அளித்த தகவலின்பேரில், திருட்டு நகைகளை வாங்கிய அடகு கடை உரிமையாளர்கள் சுரேந்தர், ராகேஷ், கண்பத், ராஜேந்திரசிங் ஆகிய நால்வரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆறு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின்பேரில் அவர்கள் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து அரை கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.