தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் நேற்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
இதனால் மாணவர்களின் நலன் கருதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் போன்ற மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. நேற்று இரவு வரை மழை விட்டு விட்டு பெய்து கொண்டெ இருந்தது. சென்னையைப் பொறுத்தவரை ஜூன் மாதம் என்பது மழை பொழியும் மாதமாக இல்லாத காரணத்தால் இம்மாதத்தில் மொத்தமாகவே 50 முதல் 60 மி.மீ. மழையே சராசரியாகப் பொழிந்துள்ளது. ஆனால் நேற்று தென் சென்னை பகுதிகளில் மட்டும் 150 மி.மீ.க்கும் அதிகமான மழை பெய்துள்ளது.
நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன், “மத்திய மேற்கு வங்க கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. ஒரு சில இடங்களில் கனமழை பெய்துள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 16 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் அடுத்து வரும் இரு தினங்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அடுத்து வரும் 24 மணி நேரத்தில் கனமழையை பொறுத்தவரையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்றும் சில மாவட்டங்களில் கனமழை தொடர்வதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு திருப்பத்தூர், திருவண்ணாமலை என இரு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மாறாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.