புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் வரலாற்றுச் சுவடுகள் புதைந்தும் கிடக்கிறது. இந்த வரலாறுகள் ஆவணப்படுத்த வேண்டியவர்கள் காலங்கடத்துவதால் சிதைந்தும் வருகிறது. தமிழர்களின் கலாச்சாரம் பண்பாடுகள் மறைக்கப்பட்டு வருகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிறுவனர் மணிகண்டன் குழுவினரால் அடையாளம் காணப்பட்டு ஆவணப்படுத்தப்பட்ட (பொற்பனைக் கோட்டை பகுதிகளில்) பழங்கால இரும்பு உருக்கு தொழிற்சாலைகளையும், பொற்பனைக்கோட்டையின் மேற்புறத்தில் அமைந்துள்ள சங்ககால செங்கல் கற்களால் ஆன கோட்டை கட்டுமானம், அதில் அமைந்துள்ள "ப " வடிவ கோட்டை கொத்தளம்,செங்கல் அடுக்கி வைக்கப்பட்ட முறைமை, கோட்டையின் வாயிற் பகுதிகள், கோட்டையின் உயரம் அகலம் உள்ளிட்டவற்றை ஆய்வு மேற்கொண்டதோடு, மேற்புறத்தில் காணப்படும் சிவப்பு கருப்பு பானை ஓடுகளின் பரவல் உள்ளிட்ட விவரங்களை சேகரித்தார்.
இந்தநிலையில்தான் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல்துறை உதவிப்பேராசிரியர் இனியன் பொற்பனைக்கோட்டை யில் ஆய்வு மேற்கொள்வது சார்ந்து இந்திய தொல்லியல்துறைக்கு அனுமதி பெறுவதற்கான திட்ட வரைவை சமர்ப்பித்துள்ள நிலையில் நேரடியாக ஒரு ஆய்வினை மேற்கொண்டார். அவருடன் புதுக்கோட்டை தொல்லியல் கழக நிறுவனர் ஆசரியர் மங்கனூர் மணிகண்டனுடன் பயணித்து அடுத்தக்கட்ட ஆய்வு குறித்து களப்பணியாற்றியிருப்பதன் மூலம் பழங்கால தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு விடயங்கள் முடிச்சுகள் இந்த முழு ஆய்வு முடிந்த பிறகு தமிழ் சமூகத்திற்கு தெரிய வரலாம் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி இருக்கிறது.