திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி தைப்பூசம் திருவிழாவையொட்டி அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வத்தலக்குண்டில் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு வகுப்புகள் நடைபெற்றது. இதனையடுத்து இன்று திண்டுக்கல் சாலையில் செயல்படும் கிறிஸ்தவப் பள்ளி முன்பு திரண்ட இந்து முன்னணியினர் மாவட்ட செயலாளர் அண்ணாதுரை தலைமையில் செந்தில் சரவணன் உள்ளிட்ட இந்து முன்னணியினர் விடுமுறை நாளில் மாணவர்கள் பள்ளியில் படிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர்.
தைப்பூசம் எனும் பாரம்பரியத்தை மாணவர்கள் அறிந்து கொள்ள விடாமல் தடுக்கும் பள்ளிகளை தடைசெய்ய வலியுறுத்தினார். இதனால் பதற்றம் ஏற்பட்டது. படித்துக்கொண்டிருந்த மாணவிகள் பள்ளியை விட்டு பதறி வெளியேறினர். கிராமத்திலிருந்து வந்த மாணவர்கள் செய்வதறியாது திகைத்து சாலையில் நின்று கொண்டிருந்தனர் இதேபோல் மதுரை சாலையில் உள்ள பள்ளியில் அங்கு படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் இந்து முன்னணியினரால் விரட்டியடிக்கப்பட்டனர். தொடர்ந்து விடுமுறையால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் நலன் கருதி சிறப்பு வகுப்புகள் எடுக்கப்பட்டுள்ளது இதனை கலாச்சாரம் பாதிக்கப்படுவதாக கூறி இந்து முன்னணியினர் அராஜகத்தில் ஈடுபட்டனர் இதனால் வத்தலக்குண்டு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.