Skip to main content

தமிழ்நாடு அரசே மது அருந்துவதை ஊக்குவிக்கிறதா? - உயர்நீதிமன்றம் கேள்வி

Published on 27/07/2023 | Edited on 27/07/2023

 

High Court questioned whether the TN government promoting liquor consumption

 

டாஸ்மாக் மதுபானக் கடை அருகில் தின்பண்டங்களை விற்பனை செய்வது மற்றும் காலி பாட்டில்களைச் சேகரிப்பதற்கான பார்களை நடத்துவதற்கான உரிமங்களுக்கான டெண்டருக்கு விண்ணப்பங்களை வரவேற்று டாஸ்மாக் நிர்வாகம் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் தேதி அறிவிப்பாணை வெளியிட்டது.

 

அதில், தற்போது பார் உரிமம் பெற்றவர்கள், பார் நடத்தும் இடத்தை டெண்டரில் வெற்றி பெற்றவருக்கு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பாணையைத் தடை செய்யக் கோரி ஆகஸ்ட் 2 ஆம் தேதி அன்று திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களைச் சேர்ந்த பார் உரிமைதாரர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர்.

 

அவர்கள் அளித்த அந்த மனுக்களில், “ஏற்கனவே பார் உரிமம் பெற்றுள்ள தங்களுக்கும், பார் உள்ள கட்டடத்தின் உரிமையாளருக்கும் தான் வாடகை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த கட்டடத்துக்கும், டாஸ்மாக் நிர்வாகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அப்படி இருக்கையில், மூன்றாம் நபரான டெண்டரில் வெற்றி பெற்றவர்களுக்கு நாங்கள் வாடகைக்கு எடுத்துள்ள டாஸ்மாக் கடையைக் கொடுக்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்க முடியாது. அதனால் பார் உரிமையாளர்களின் உரிமையைப் பாதுகாக்காமல் வெளியிடப்பட்டுள்ள டெண்டருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், டெண்டரை ரத்து செய்து உரிமத்தை நீட்டித்துத் தர உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

 

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், எட்டு மாவட்டங்களில் டாஸ்மாக் பார் டெண்டர் குறித்து அறிவிப்பாணைகளை ரத்து செய்து கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி அன்று உத்தரவிட்டார். மேலும் அதில், புதிய டெண்டர் அறிவிப்பாணையை வெளியிடும் போது, நில உரிமையாளர்களிடம் ஆட்சேபமில்லா சான்று பெற வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுத் தீர்ப்பளித்தார்.

 

இந்த உத்தரவை எதிர்த்து டாஸ்மாக் நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். அவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணையின் போது நீதிபதிகள், “அனைத்து மாநில அரசுகளும் மதுவிலக்கு சட்டம் கொண்டு வர வேண்டும் என்று அரசியல் சாசனச் சட்ட கொள்கை கூறுகின்றது. ஆனால், தமிழ்நாடு அரசே மதுபானம் அருந்துவதை ஊக்குவிக்கும் விதமாகச் செயல்படுகிறதே” என்று கருத்து தெரிவித்தனர். அதன் பிறகு, இந்த வழக்கின் அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிவடைந்ததைத் தொடர்ந்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோஷ்டி மோதலால் டாஸ்மாக் கடையை சூறையாடி, தீ வைப்பு; இளைஞர்களின் வெறியாட்டம்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
கோஷ்டி மோதலால் டாஸ்மாக் கடையை சூறையாடி, தீ வைப்பு; இளைஞர்களின் வெறியாட்டம்!

வேலூர் மாவட்டம், அலமேலுமங்காபுரம் ஏரியூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு. இவர் வேலூரை அடுத்த பெருமுகை கிராமத்தில் டாஸ்மாக் பாரை ஏலத்தில் எடுத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில், ஏரியூர் பகுதியில் உள்ள திரெளபதி அம்மன் கோவில் திருவிழாவில் துரியோதனன் படுகளம் நேற்று (28-04-24) காலை நடந்தது. திருவிழாவில் அலமேலுமங்காபுரம் பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் சிலருக்கும், ஏரியூர் பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே வாக்குவாதம், தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, அங்கிருந்த பெரியவர்கள், இருதரப்பையும் விளக்கிவிட்டு அனுப்பியுள்ளனர். கோபம் குறையாமல் இருதரப்பும் சென்றுள்ளது.

அதன் பின்னர், இரவில் நடைபெற்ற தீமிதி திருவிழாவின்போதும் இருதரப்பைச் சேர்ந்தவர்களுக்கும் மீண்டும் தகராறு, மோதல் நடந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த அலமேலுமங்காபுரத்தைச் சேர்ந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட வாலிபர்கள், ‘ஏரியூர் பசங்க இங்கவந்து துள்ளக்காரணமே சந்துருதான்’ எனக்கூறி பெருமுகையில் உள்ள சந்துருவின் டாஸ்மாக் பாருக்கு சென்று காலி மது, பீர் பாட்டில்களால் அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கி விரட்டியுள்ளனர். இதனால், அங்கு மது அருந்தி கொண்டிருந்தவர்கள் அலறியடித்து அங்கிருந்து ஓடியதும், அந்த வாலிபர்கள் அங்கிருந்த அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கி பாருக்கு தீ வைத்துவிட்டு தப்பித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வேலூர் எஸ்.பி மணிவண்ணன், ஏ.டி.எஸ்.பி பாஸ்கரன் மற்றும் காவல் ஆய்வாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு அப்பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். டாஸ்மாக்கை அடித்து நொறுக்கி தீவைத்த நபர்களை சத்துவாச்சாரி காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Story

மெரினாவில் அருங்காட்சியகம்; மக்களின் பங்களிப்பை நாடும் தமிழ்நாடு அரசு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 The Tamil Nadu government will make a request to the people on Independence Day Museum at Marina

விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் தியாகத்தையும் பங்களிப்பையும் போற்றும் வகையில் சென்னை மெரினா கடற்கரையில் எதிரே பிரம்மாண்ட சுதந்திர தின அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு மகத்தானது. விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் தியாகத்தையும் பங்களிப்பையும் போற்றும் வகையில் சுதந்திர தின அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் 75ஆவது சுதந்திர தினவிழா உரையின் போது அறிவித்துள்ளார்.

அதன்படி, சென்னை மெரினா கடற்கரையின் எதிரில், பாரம்பரியக் கட்டடமான ஹுமாயூன் மஹால் கட்டடத்தில் சுமார் 80,000 சதுர அடி பரப்பளவில் பெரிய அளவில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளது. இந்த அருங்காட்சியகம் சிறப்பாக அமைந்திட அனைத்து தரப்பு மக்களின் பங்களிப்பும் தேவைப்படுகிறது. பொது மக்கள் தங்கள் வசம் உள்ள சுதந்திரப் போராட்டம் குறித்த பழங்கால ஆவணங்கள், கையெழுத்துப் பிரதிகள், செய்தித்தாள்கள், ஜெயில் வில்லைகள், இராட்டைகள், பட்டயங்கள், ஐ.என்.ஏ சீருடைகள், ஐ.என்.ஏ. அஞ்சல் தலை மற்றும் ரூபாய் நோட்டுகள் போன்ற இனங்களை நன்கொடையாக அளிக்கலாம். தங்கள் வசம் உள்ள அரிய பொருட்களை சென்னை அல்லது 23 மாவட்ட அருங்காட்சியகங்களுக்கு நேரிடையாக சென்று வழங்கலாம். இவ்வாறு வழங்கப்படும் பொருட்களுக்கு உரிய ஒப்புகைக் கடிதம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அருங்காட்சியக ஆணையரால் வழங்கப்படும்.

இவ்வாறான அரிய பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் போது அதை வழங்கியவர்களின் பெயர்களும் இடம்பெறும். ஆகவே, பொதுமக்கள் தங்களிடம் உள்ள சுதந்திரப் போராட்டம் தொடர்பான அரும்பொருட்களை அமையவுள்ள வரலாற்று சிறப்பு மிக்க அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக வழங்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.