"தமிழ்நாட்டில் அடுத்த 9 மாவட்டங்களில் மூன்று மணி நேரத்துக்கு லேசானது முதல் மிதமான மழை வாய்ப்புள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யலாம். தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் மூன்று மணி நேரத்துக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
புதுச்சேரியிலும் மதியம் 12.30 மணி வரை மிதமான மழை பெய்யலாம். கடந்த 10 மணி நேரத்தில் மெரினாவில் 24 செ.மீ., நுங்கம்பாக்கத்தில் 21 செ.மீ., எம்.ஜி.ஆர். நகரில் 20 செ.மீ., மழை பெய்துள்ளது". இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்த நிலையில், அதிகனமழை வரை பெய்தது. சென்னையில் திடீரென அதிகனமழை பெய்ய காரணம் என்ன? என்பது குறித்து விளக்கம் அளித்துள்ள சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் புவியரசன், "நிலப்பரப்புக்குள் மேலடுக்கு சுழற்சி வந்ததால் சென்னையில் அதிகனமழை பெய்துள்ளது. சில நேரங்களில் கணிக்க முடியாமல் போகும். நேற்று சென்னையில் ஒரு சில இடங்களில் அதிக மழையும், சில இடங்களில் குறைவாகவும் மழை பெய்துள்ளது. நேற்று பெய்தது போல சென்னையில் அதிகனமழை பெய்ய வாய்ப்பில்லை" என்றார்.