ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள திம்பம் மலைப்பாதை தமிழக -கர்நாடக இடையே உள்ள மிகவும் முக்கிய போக்குவரத்து பகுதியாக உள்ளது. திம்பம் மலை பாதையானது 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட மிகவும் ஆபத்தான சாலையாகும். இங்கே நாளொன்றுக்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் கர்நாடக மாநிலமான சாம்ராஜ்நகர், மைசூர் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு செல்கிறது. குறிப்பாக சரக்கு லாரிகள் போக்குவரத்து அதிக அளவில் நடைபெற்று வருகிறது.
கடந்த சில நாட்களாக திம்பம் மலைப் பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திம்பம் மலைப்பகுதியில் இன்று காலை முதலே கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் திம்பம் வழியாக செல்லும் வாகனங்கள் இன்று காலை முகப்பு விளக்குகளை எரியவிட்ட வாறு மெதுவாக சென்றன. மேலும் விபத்துகள் நடைபெறாத வகையில் வாகனங்கள் அதிக ஒலி எழுப்பியவாறு சென்றன.