மூளைச்சாவு அடைந்த இளைஞரின் இதயம் வேலூரிலிருந்து சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு 94 நிமிடங்களில் கொண்டுவரப்பட்டு பொருத்தப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த தினகரன் என்ற இளைஞர் சில நாட்களுக்கு முன்பு சாலை விபத்தில் படுகாயம் அடைந்தார். அவருக்கு வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று காலை அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து இளைஞரின் உடல் உறுப்புகளை உறுப்பு தானம் செய்ய அவரது பெற்றோர்கள் முடிவெடுத்த நிலையில், அவருடைய சிறுநீரகம், நுரையீரல் உள்ளிட்ட பாகங்கள் அதே மருத்துவமனைக்கு தானமாக கொடுக்கப்பட்டது.
அதனையடுத்து இதயம் அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள நோயாளி ஒருவருக்கு தேவைப்பட்ட நிலையில் தமிழக உடலுறுப்பு ஆணையம் அவருக்கு இதயத்தை பொருத்த அணைபிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து மதியம் 3 மணி அளவில் இதயம் பிரத்யேக பெட்டியில் வைக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பப்பட்டது. வேல்முருகன் என்பவர் ஆம்புலன்சை இயக்க, வேலூர் சிஎம்சி மருத்துவமனையிலிருந்து சென்னைக்கு 94 நிமிடங்களில் கொண்டுவரப்பட்டது. இதற்காக ஆம்புலன்ஸ் வரும் வழிகளில் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் பணிகளில் போக்குவரத்து போலீசார் திறம்பட செயலாற்றிய நிலையில் கூட்டுமுயற்சியின் பலனாக சரியாக இன்று மாலை 4.30 மணிக்கும் இதயம் சென்னை வந்து சேர்ந்தது.