Skip to main content

தனியார் பேருந்தில் குட்கா கடத்தல்; ஓட்டுநர் உள்ளிட்ட 3 பேர் கைது

Published on 17/03/2022 | Edited on 17/03/2022

 

Gutka abduction on private bus; 3 arrested including driver

 

ஊத்தங்கரை அருகே தனியார் பேருந்தில் குட்கா போதைப் பொருள்களை கடத்தி வந்த ஓட்டுநர் உள்ளிட்ட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

பெங்களூருவில் இருந்து விழுப்புரம் நோக்கிச் செல்லும் தனியார் பேருந்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் கடத்தப்படுவதாக கிருஷ்ணகிரி எஸ்.பி. சாய்சரண் தேஜஸ்விக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து, பெங்களூரு - விழுப்புரம் வழித்தடத்தில் செல்லும் தனியார் பேருந்துகளில் சோதனை நடத்த காவல்துறையினருக்கு எஸ்.பி. உத்தரவிட்டார். 

 

ஊத்தங்கரை டி.எஸ்.பி. அலெக்சாண்டர், ஆய்வாளர் லட்சுமி, எஸ்.ஐ. சுப்ரமணி மற்றும் காவலர்கள் ஊத்தங்கரை பி.டி.ஓ. அலுவலகம் அருகில் சந்தேகத்திற்கு இடமாக வந்த ஒரு பேருந்தை நிறுத்தி சோதனை நடத்தினர். பேருந்தின் மேற்கூரையில் நான்கு பெட்டிகள் இருந்தன. அவற்றைத் திறந்து சோதனை செய்தபோது 100 கிலோ குட்கா பொருள்கள் இருந்தது தெரியவந்தது. அவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பேருந்தையும் ஊத்தங்கரை காவல்நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். 

 

பேருந்து ஓட்டுநரிடம் விசாரித்தபோது அவர், தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கைலாபுரத்தைச் சேர்ந்த நவீன்குமார் (25) என்பதும், நடத்துநர் பெயர் சண்முகம் (52), உதவியாளர் பெயர் சிவக்குமார் (21) என்பதும் தெரியவந்தது. அவர்கள்தான் பெங்களூருவில் இருந்து குட்காவை கடத்தி வந்தனர் என்பது தெரியவந்ததை அடுத்து மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

தெலுங்கில் பதவியேற்ற தமிழக எம்.பி!

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
Tamil Nadu MP sworn in Telugu

ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதனையடுத்து நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் கடந்த 9 ஆம் தேதி (09.06.2024) நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 18 வது மக்களவையில் முதல் கூட்டத்தொடர் நேற்று (24.06.2024) காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்த கூட்டத் தொடரையொட்டி மக்களவைக்குப் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் பதவிப்பிரமாணம் செய்து வைத்து வருகிறார்.

இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவையில் தமிழகத்தைச் சேர்ந்த 39 எம்.பி.க்கள் பதவியேற்றனர். அந்த வகையில் சசிகாந்த் செந்தில், டி.ஆர்.பாலு, ஆ.ராசா எஸ். ஜெகத்ரட்சகன், தயாநிதி மாறன், மாணிக்கம் தாகூர், கே.சுப்பராயன், தொல்.திருமாவளவன், கனிமொழி, கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி, தமிழச்சி தங்கப்பாண்டியன், கலாநிதி வீராசாமி, கதிர் ஆனந்த், சி.என். அண்ணாதுரை, சு.வெங்கடேசன், செல்வ செல்வகணபதி, விஷ்ணு பிரசாத், கே.நவாஸ்கனி, க.செல்வம், விஜய் வசந்த், ரவிக்குமார், மலையரசன், ஈஸ்வரசாமி, சுதா, ராணி ஸ்ரீ குமார், மாதேஸ்வரன், சச்சிதானந்தம், செல்வராஜ், ராபர்ட் புரூஸ், வைத்திலிங்கம், ஆ.மணி, தரணிவேந்தன், கணபதி ராஜ்குமார், பிரகாஷ், துரை வைகோ, முரசொலி, அருண் நேரு, தங்க தமிழ்ச்செல்வன் என 39 பேரும் தமிழில் பதவியேற்று கொண்டனர். 

இவர்களில் பலரும் கையில் அரசியலமைப்பு புத்தகத்தை ஏந்தி உறுதிமொழி எடுத்தனர். மேலும் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயர்களை குறிப்பிட்டும் தி.மு.க எம்.பி.க்கள் பதவியேற்றனர். அதோடு சிலர், ‘வருங்காலம் எங்கள் உதயநிதி’ எனக் கூறியும் பதவியேற்றனர். 

இதில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.பி கே.கோபிநாத் தெலுங்கு மொழியில் பதவியேற்றுக்கொண்டார். தமிழ்நாட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.பி. தெலுங்கில் பதவியேற்றது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. மேலும், அவர் பதவியேற்ற பின் இறுதியாக, ‘நன்றி, வணக்கம்’ எனக் குறிப்பிட்டு ‘ஜெய் தமிழ்நாடு’ எனக் கோஷம் எழுப்பினார்.

Next Story

குடிநீரில் கலந்த கழிவுநீர்; ஆய்வாளர் சஸ்பெண்ட்!

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
Hosur Corporation Chinna Elsakhiri Ambedkar Nagar water incident

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன ஏலசகிரி பகுதியில் அம்பேத்கர் நகர் அமைந்துள்ளது. கடந்த 5 நாட்களுக்கு முன்னர் மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்ட குடிநீரைப் அப்பகுதி மக்கள் அருந்தியுள்ளனர். இந்தக் குடிநீரை அருந்தியவர்களுக்குக் காய்ச்சல், வாந்தி, பேதி, மயக்கம் உள்ளிட்ட உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டன. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையிலும், சிலர் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். 

இதையடுத்து ஓசூர் சார் ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், மேயர், எம்.எல்.ஏ., எம்.பி. உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இப்பகுதி மக்களுக்கு அருகில் உள்ள சாந்தபுரம் ஏரியில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு, அதன் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் சேகரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில்தான் குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் கழிவுநீர் கலந்தது உறுதியானது. அதனைத் தொடர்ந்து குழாய் ஆய்வாளர் சீனிவாசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக பிறப்பிக்கபட்டுள்ள உத்தரவில், பணியில் அலட்சியமாகவும், கவனக்குறைவாகவும் செயல்பட்டதாக ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த 80 பேருக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல் நலப் பாதிப்புகள் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.