கன்னியாகுமரி மாவட்டம், மூலச்சல் பகுதியைச் சோ்ந்தவா் ஜார்ஜ் பொன்னையா. இவர் ஜனநாயக கிறிஸ்தவ பேரவையின் தலைவராகவும் குழித்துறை கத்தோலிக்க மறைமாவட்ட பாதிரியாராகவும் உள்ளாா். கடந்த ஜூலை 18- ஆம் தேதி காவல்துறை அனுமதியில்லாமல் அருமனையில் நடந்த ஓரு கிறிஸ்தவ அமைப்பின் கூட்டத்தில் பாரத மாதா குறித்தும், பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் தோ்தலில் தி.மு.க. வெற்றி பெற்றது குறித்தும், அமைச்சா் சேகா்பாபு குறித்தும், கொச்சைப்படுத்தும் விதமாக சா்ச்சைக்குரிய கருத்துகளை ஜார்ஜ் பொன்னையா பேசினார்.
இது பா.ஜ.க, இந்து முன்னணி உள்ளிட்ட இந்து இயக்கங்கள் மற்றும் இந்துக்கள் மனதைப் புண்படும் விதமாக இருந்தது. இதனால் ஜார்ஜ் பொன்னையா மீது பல்வேறு காவல் நிலையங்களில் புகார் கொடுக்கபட்டது. மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் பா.ஜ.க. மற்றும் இந்து மகா சபையினர் புகார் கொடுத்தனர். மேலும் ஜார்ஜ் பொன்னையா மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், போராட்டங்கள் நடத்த இருப்பதாகவும் அறிவித்தனர்.
இந்த நிலையில் அருமனை காவல் நிலையத்தில் ஜார்ஜ் பொன்னையா மீது 7 பிாிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து தலைமறைவான ஜார்ஜ் பொன்னையாவை பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கபட்டன. இந்த நிலையில் மதுரை கள்ளிக்குடியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட ஜார்ஜ் பொன்னையாவை காவல்துறையினர் மதுரையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி காவல் நிலையம் கொண்டு வந்து அங்கிருந்து விசாரணையை முடித்து கொண்டு இன்று (24/07/2021) மதியம் குழித்துறை அரசு மருத்துவமனையில் அவருக்கு உடல் பரிசோதனை முடித்து விட்டு, குழித்துறை நீதிமன்றத்தின் மாஜிஸ்திரேட் செல்வம் முன்னிலையில் காவல்துறையினர் ஆஜர்ப்படுத்தினர்.
இதையடுத்து, மாஜிஸ்திரேட் ஜார்ஜ் பொன்னையாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டாா். அதைத் தொடர்ந்து ஜார்ஜ் பொன்னையாவை பாளையங்கோட்டை மத்திய சிறையில் இன்று (24/07/2021) மாலை அடைத்தனர்.
இந்த நிலையில், ஜார்ஜ் பொன்னையாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, பாளையங்கோட்டை சிறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.