புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகில் உள்ள ராஜேந்திரபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சூர்யாவின் மகள் ஐஸ்வர்யா. இவர் சென்னைக்கு வேலைக்குச் சென்ற இடத்தில் விழுப்புரம் மாவட்டம் புலியனூர் கிராமத்தைச் சேர்ந்த ஜீவா என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டு கடந்த ஆண்டு கர்ப்பிணியாகத் தாய் வீட்டிற்கு இருவரும் வந்தனர்.
பிரசவ காலத்தில் ஐஸ்வர்யாவுக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். பின்பு ஐஸ்வர்யாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவசரமாக மருத்துவர்கள் பிரசவம் பார்த்தனர். இரண்டு பெண் குழந்தைகள் பிறந்த நிலையில் ரத்தப் போக்கு அதிகமாகி ஐஸ்வர்யா உயிரிழந்தார். ஐஸ்வர்யாவின் இறப்பிற்கு மருத்துவமனை நிர்வாகம் தான் காரணம் என்று கூறி அவரது உறவினர்கள் சாலை மறியல் செய்தனர். அப்போது சமாதான பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் குழந்தைகளுக்கு உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறி அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து சில மாதங்களில் இரட்டைக் குழந்தைகளின் தந்தை ஜீவா குழந்தைகளை தவிக்கவிட்டுச் சென்றுவிட்ட நிலையில் கூலி வேலை செய்துவரும் ஐஸ்வர்யாவின் தாய் சூர்யா இரு குழந்தைகளையும் தனியாக கவனித்து வந்தார். இரு குழந்தைகளையும் கவனித்து வருவதால் கூலி வேலைக்கு செல்லா முடியாமல் இரு குழந்தைகளுக்கும் பால் வாங்கிக் கொடுக்க கூட வசதியின்றி தவித்து வருகிறார். மேலும், இந்த குழந்தைகளை வளர்க்க ஏதாவது அரசு உதவி கிடைக்குமா என்று பச்சிளங்குழந்தைகளை தூக்கிக் கொண்டு கண்ணீரோடு அரசு எந்திரங்களை அணுகி வருகிறார். ஆனால் இதுவரை எந்த உதவியும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் தான் இன்று ஆயிங்குடி துணை சுகாதார நிலையம் திறப்பு விழாவிற்கு வந்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை சந்தித்து அரசு உதவிக்கான கோரிக்கை வைக்க குழந்தைகளுடன் பாட்டி சூர்யா வந்திருந்தார். ஆனால் அமைச்சரை சந்திக்கவிடாமல் தடுக்கப்பட்டதால் பேரக் குழந்தைகளோடும், கண்ணீரோடும் ஓரமாக நின்ற மூதாட்டி மாவட்ட ஆட்சியர் அருணாவிடம் தன் கண்ணீர் கோரிக்கையை இறக்கி வைத்துள்ளார்.
அழுதுகொண்டிருந்த இரு குழந்தைகளையும் சமாதானம் செய்ய முடியாமல் கண்கலங்கி நின்ற மூதாட்டி சூர்யா நம்மிடம், “என் மகள் ஐஸ்வர்யா காதலித்து திருமணம் செய்து கொண்டு கர்ப்பிணியா ஊருக்கு வந்த பிறகு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் செக்கப் பார்த்தோம். கடைசியில பிரசர் அதிகமா இருக்குன்னு சொன்னாங்க. அதுக்காக சிகிச்சைக்கு போனப்ப உடனே பிரசவம் பார்த்துட்டாங்க. ஆனா என் மகளுக்கு ரத்தப்போக்கு அதிகமா இருந்தும் ஐசியூவில் வைக்கல. சாதாரண வார்டுல வச்சிருந்தாங்க. இரட்டை குழந்தை பிறந்ததால இப்படித் தான் ரத்தம் போகும்னு சொன்னாங்க. ஆனா அதிகாலையில இறந்துட்டா. அப்பறம் அமைச்சர் மா.சுப்பிரமணியனை கூட பார்த்து கோரிக்கை வச்சோம். இப்ப மறுபடி கோரிக்கை சொல்ல வந்தோம். அவரை பார்க்க முடியல. கலெக்டர் அம்மாவை பார்த்தோம் நடவடிக்கை எடுக்கிறதா சொன்னாங்க.
என்ன கோரிக்கை?
தினக்கூலி வேலைக்குத் தான் போகனும். இப்ப இந்த விஜயாஸ்ரீ, ஓவியாஸ்ரீ ஆகிய இரு குழந்தைகளை வச்சுகிட்டு வேலைக்கும் போக முடியல. அதனால குழந்தைகளுக்கு உதவியும் குழந்தைகளை வளர்க்க நிரந்தர வருவாய் கிடைக்கிறது போல ஏதாவது ஒரு அரசு வேலையும் கொடுத்தால் போதும்” என்றார் கண்ணீர் மல்க.. அரசின் உதவிகள் இந்த ஆதரவற்ற குழந்தைகளுக்குக் கிடைக்குமா?