Skip to main content

நிலைமை சீராகிவிட்டதால் கிராமசபைக்கூட்ட விதிகள் பின்பற்றப்படும்! - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசுத் தரப்பில் விளக்கம்!

Published on 12/02/2021 | Edited on 12/02/2021

 

grama sabha meeting tamilnadu government chennai court order

 

தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டப்படி கிராம சபைக் கூட்டம், ஆண்டுக்கு நான்கு முறை, ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் நடத்தப்பட வேண்டும். ஆனால், கரோனா ஊரடங்கு விதிகளால், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15- ஆம் தேதி மற்றும் அக்டோபர் 2- ஆம் தேதி நடத்த வேண்டிய கிராம சபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.

 

இதை எதிர்த்தும், கிராம சபைக் கூட்டங்களை நடத்தவும், அரசிற்கு உத்தரவிடக்கோரி தி.மு.க. தரப்பில் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, கடந்த ஆண்டு நவம்பர் முதல் வாரமும், மக்கள் நீதி மய்யம் சார்பில் பொதுச் செயலாளர் ஏ.ஜி.மௌரியா இந்த ஆண்டு ஜனவரி இரண்டாவது வாரமும், பொது நல மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகளில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டிருந்தது.

grama sabha meeting tamilnadu government chennai court order


இந்நிலையில், இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத் தரப்பில், ‘ஒவ்வொரு ஆண்டும் நான்கு முறை கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வந்தது. கரோனா ஊரடங்கு காரணமாகத்தான், கடந்த ஆண்டு நடத்தப்படவில்லை. தற்போது, நிலைமை சீராக இருந்துவருவதால், கிராம சபைக் கூட்ட விதிகள் முறையாகப் பின்பற்றப்படும். மேலும், பதிலளிக்க அவகாசம் வேண்டும்’ எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.

 

அதையேற்று, பதில் மனுத் தாக்கல் செய்ய ஒரு வார கால இறுதி அவகாசம் வழங்கிய தலைமை நீதிபதி அமர்வு, அவ்வாறு தாக்கல் செய்யாவிட்டால் பதில் மனு இல்லாமலேயே வழக்குகள் விசாரிக்கப்படும் எனத் தெரிவித்து, வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தது.

 

 

 

சார்ந்த செய்திகள்