ஊராட்சி மன்றத் தலைவர்களை திட்ட பணிகளைச் செயல்படுத்த விடாமல் தடுப்பதாக பொறியாளரின் மீதும் ஆளும்கட்சியினர் மீதும் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள்.
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய தலைவர்களின் கூட்டமைப்புக் கூட்டம், முட்லூரில் கூட்டமைப்புத் தலைவர் பெருமாள் தலைமையில் நடைபெற்றது. இதில் பு.முட்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயசீலன் கௌரவத் தலைவர் சிவசங்கரி, ராம், மகேஷ் மற்றும் ஊராட்சித் தலைவர்கள் மரகதம், தியாகராஜன், ரவிக்குமார் உட்பட 20க்கும் மேற்பட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் ஊராட்சிகளுக்கு அரசு கிராமத்திற்கு ஒதுக்கும் திட்டங்களை முறையாகச் செயல்படுத்தவிடாமல் தடுக்கும் விதத்தில் கிராம ஊராட்சிகளுக்கான வட்டார வளர்ச்சி அலுவலர், ஒன்றிய பொறியாளர் ஆகியோரின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன என்று ஊராட்சி மன்றத் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்குக் கொண்டு செல்வது எனவும் முடிவு செய்துள்ளனர்.
மேலும் பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் ஆளுங்கட்சியினரின் பினாமிகளுக்குத் திட்டப்பணிகளை ஒதுக்கித் தரும் ஊராட்சி ஒன்றிய பொறியாளருக்கு கண்டனம் தெரிவித்து அந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதே நிலை தொடர்ந்து நீடித்தால் ஊராட்சி மன்றத் தலைவர்கள் அனைவரும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவது எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் 20க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவர்களின் திட்டப்பணிகளில் அதிகாரிகள் ஆதரவோடு ஆளும் கட்சியினரின் குறுக்கீடுகள் தலையீடுகள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற குற்றச்சாட்டுகள் மாவட்ட ஆட்சியரிடம் குவிந்து வருகின்றன. மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சகாமூரி இதற்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்று ஊராட்சிமன்றத் தலைவர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள்.