அண்மையில் நாமக்கல்லில் சவர்மா சாப்பிட்ட மாணவி ஒருவர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு உணவு கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனையில் சிக்கும் தரமற்ற உணவுப் பொருட்கள் குறிப்பாக தரமற்ற அசைவ உணவுகளை பறிமுதல் செய்வதோடு கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் உள்ள அசைவ உணவு கடைகள், பேக்கரிகள், அங்காடி கடைகள் ஆகியவற்றில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது தனியார் ஹோட்டல் ஒன்றில் அரசு மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச சத்துணவு முட்டை வைக்கப்பட்டு இருந்தது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
அது தொடர்பாக விசாரணை நடத்திய அதிகாரிகள் தனியார் ஹோட்டலுக்கு சீல் வைத்தனர். தனியார் ஹோட்டலுக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் முட்டைகள் வந்தது எப்படி என்பது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். முட்டையை விற்பனை செய்த அங்கன்வாடி பொறுப்பாளர்கள் அல்லது அங்கன்வாடிகளுக்கு முட்டையை சப்ளை செய்யும் டெண்டர் எடுத்தவர்களை கண்காணித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.