
ஆளுநருக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வில் இன்று நடைபெற்றது.
ஆளுநர் தரப்பிலிருந்து மசோதாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டது எனக் கூறப்பட்டபோது, “அது தொடர்பான கோப்புகள் சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்பப்பட்டதா? ஆளுநருக்கு சட்டத்தை செயலிழக்க வைக்கவோ, முடக்கி வைக்கவோ (Kill the Bill) அதிகாரம் இல்லை. குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதாக இருந்தால் ஆளுநர் முதலிலேயே செய்திருக்க வேண்டும். மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியாது.
ஆளுநர், ஒன்றிய அரசின் NOMINEE என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இவ்விவகாரம் தொடர்பாக, தமிழ்நாடு முதலமைச்சரை அழைத்து இந்த பிரச்சனையை பேசித் தீர்க்க வேண்டும்” என்று அறிவுறுத்திய உச்சநீதிமன்ற நீதிபதிகள், “சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது ஏன்? மசோதாக்கள் மீது முடிவெடுக்கும் விவகாரத்தில் ஆளுநரே முடிவெடுக்க வேண்டும். காலதாமதம் செய்தால் மசோதாக்கள் விசயத்தில் நாங்கள் உத்தரவிட நேரிடும்” எனக் கடுமை காட்டியதுடன், வழக்கு விசாரணையை 11 ஆம் தேதி ஒத்திவைத்தனர்.