பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி இன்று (08.12.2021) திருச்சி வந்தடைந்தார். சென்னையிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டு இன்று காலை 11 மணிக்குத் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அவரை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு வரவேற்றார். மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
பின்னர் கார் மூலம் பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகைக்குச் சென்றார். அங்கு மதிய உணவிற்குப் பின்னர், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தைப் பார்வையிட்டு கலந்துரையாடல் நடத்துகிறார். இரவு அங்கேயே தங்கும் கவர்னர் ரவி, நாளை காலை 6.30க்கு புறப்பட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்கிறார். 8 மணிவரை ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனம் செய்யும் அவர், பின்னர் அங்கிருந்து புறப்பட்டு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 10.30 மணிக்கு நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்கிறார்.
மதிய உணவிற்குப் பின்னர் மாலை முன்னாள் ராணுவத்தினர், என்சிசி மாணவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நடைபெறும் கலந்துரையாடலில் கலந்துகொள்கிறார். நாளை மறுநாள் காலை 8.30 மணிக்கு இண்டிகோ விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் செல்கிறார்.