விழுப்பும் மாவட்டம் செஞ்சி அருகே உள்ளது கன்னலம் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ராமு என்பவரது மனைவி சாந்தி (53). இவரது மகன் அவினாஷ் படித்துவிட்டு வேலையில்லாமல் இருந்துள்ளார். இதையடுத்து, செஞ்சி அருகே உள்ள பென்னகரத்தைச் சேர்ந்தவர் உத்தர குமார் (49). அவினாஷ், அவரது தாயார் சாந்தி ஆகிய இருவரையும் 2019ஆம் ஆண்டு சென்று சந்திதித்த உத்தர குமார் அவர்களிடம், புதுச்சேரியைச் சேர்ந்த வசந்த ராஜா என்பவரை எனக்குத் தெரியும் அவர் சென்னை விமான நிலையத்தில் பலருக்கு வேலை வாங்கிக் கொடுத்துள்ளார் என கூறியுள்ளார். அதேபோன்று உங்களது மகன் அவினாஷுக்கு வேலை வாங்கித் தர அவர் சம்மதித்துள்ளார். அந்த வேலை வாங்குவதற்காக 10 லட்ச ரூபாய் பணம் தர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
உத்தர குமாரின் பேச்சை நம்பிய சாந்தி, 10 லட்சம் பணத்தைக் ரொக்கமாக உத்தர குமாரின் வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளாராம். இந்த நிலையில் உத்தர குமார், கடந்த சில நாட்களுக்கு முன்பு விமான நிலையத்தில் வேலை செய்வதற்கான பணி நியமன ஆணை ஒன்றைக் கொண்டுவந்து சாந்தியிடம் கொடுத்துள்ளார். இதை எடுத்துக்கொண்டு சாந்தி மகன் அவினாஷ் சென்னை விமான நிலையத்துக்குச் சென்று அங்கிருந்த அதிகாரிகளிடம் பணியில் சேர வேண்டும் என்று அந்த உத்தரவைக் காட்டியுள்ளார். அவர்கள் அதை வாங்கிப் பார்த்துவிட்டு, அது போலியான பணி நியமன ஆணை என்று தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவினாஷ், ஊருக்குச் சென்று தனது தாயிடம் விஷயத்தைக் கூறியுள்ளார்.
இதையடுத்து தாயும் மகனும் இருவரும் உத்தர குமார் வீட்டுக்குச் சென்று தாங்கள் பணி நியமன ஆணை வழங்கியது போலியானது. எனவே நாங்கள் கொடுத்த பணம் பத்து லட்சத்தைத் திருப்பித் தாருங்கள் என்று கேட்டுள்ளனர். அப்போது பணத்தைத் தர முடியாது என கொலை மிரட்டல் விடுத்துள்ளாராம் உத்தர குமார். இதையடுத்து, சாந்தி அவரது மகன் அவினாஷ் ஆகிய இருவரும் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. இருதயராஜ், ரவீந்திரன் ஆகியோர் ஆலோசனையின்படி உதவி ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் இந்த வழக்கைப் பதிவுசெய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையின் அடிப்படையில் 10 லட்சம் பணம் மோசடி செய்த உத்தர குமாரை கைது செய்துள்ளனர்.
இதேபோன்று திண்டிவனம் அருகே உள்ள நல்லியக்கோடன் நகரைச் சேர்ந்தவர் தேவதாஸ்(65). இவர் திண்டிவனம் அருகிலுள்ள வெள்ளிமேடு பேட்டை செம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கலியபெருமாள் என்பவரிடம் சென்று, அவரது மகன் ஜெயக்குமார் என்பவருக்குத் தாம்பரம் மெட்ரோ ரயிலில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 60 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுள்ளார். இதேபோல் கலியபெருமாள் நண்பர்களான மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ரவி மகன் அய்யாதுரை மற்றும் வெள்ளிமேடு பேட்டையைச் சேர்ந்த கார்த்திக் நாராயணன் ஆகியோரிடமும் வேலை வாங்கித் தருவதாக 60 ஆயிரம் ரூபாய் பணத்தைப் பெற்றுள்ளார். இவர்கள் 3 பேரும் வேலை வாங்கித் தருமாறு தேவதாஸிடம் அடிக்கடி சென்று கேட்டுள்ளனர். இதை எடுத்து தேவதாஸ் சென்னை மெட்ரோ ரயிலில் வேலை செய்வதற்கான பணி நியமன ஆணை ஒன்றை தயார் செய்து இவர்களிடம் கொடுத்துள்ளார். அந்த ஆணையை எடுத்துக்கொண்டு மெட்ரோ ரயில் நிலைய அதிகாரிகளைச் சென்று சந்தித்துள்ளனர். அந்த அதிகாரிகள் இது போலியான பணி நியமன ஆணை என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து பெருமாள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தேவதாசை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.