Skip to main content

ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஆசிரியர்கள் பணியிழக்கும் ஆபத்து: அன்புமணி 

Published on 05/01/2019 | Edited on 05/01/2019
Government Teachers




பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

 

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் 1,000 ஆசிரியர்கள், அவர்கள் செய்யாத தவறுக்காக வேலை இழக்கும் சூழலுக்கு ஆளாகியுள்ளனர். அதுமட்டுமின்றி, தனியார் பள்ளிகளில் பணியாற்றும் 30 ஆயிரத்திற்கும் கூடுதலான ஆசிரியர்களுக்கும் இதேநிலை ஏற்பட்டுள்ளது.

 

இந்தியாவில் கல்வி பெறும் உரிமைச் சட்டம் கடந்த 2009-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்டத்தின்படி விதிகள் வகுக்கப்பட்டு 2010-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23-ஆம் தேதி முதல் நடைமுறைப் படுத்தப்பட்டது. அதன்பின்னர் ஓராண்டு கழித்து 2011-ஆம் ஆண்டு நவம்பர் 15-ஆம் தேதி தான்  தமிழகத்தில் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தது.  கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தேசிய அளவில் அச்சட்டம் நடைமுறைக்கு வந்த 23.08.2010 முதல் 23.08.2012 வரை அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களாக சேர்ந்தவர்கள் அடுத்த 5 ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. தமிழகத்தைப் பொருத்தவரை 2011-ஆம் ஆண்டு நவம்பர் 15-ஆம் தேதி தான் கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்தது என்பதால் 2016-ஆம் ஆண்டு நவம்பர் 15-ஆம் தேதிக்குள் தகுதித் தேர்வில் ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றால் போதுமானது என அறிவிக்கப்பட்டது. ஆனால், இடைப்பட்ட காலத்தில் மூன்று முறை மட்டுமே தகுதித் தேர்வு நடத்தப்பட்டதால் அனைத்து ஆசிரியர்களாலும் தேர்ச்சி பெற முடியவில்லை.

 

இதையடுத்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான  காலக்கெடு 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அந்த அவகாசம்  இன்னும் இரண்டரை மாதங்களில் நிறைவடையவுள்ள நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களும் இன்று வரை தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. வரும் மார்ச் 31- ஆம் தேதிக்குள் அவர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால் வேலை இழப்பது உறுதி.

 

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தனியார் பள்ளி ஆசிரியர்களின் கல்வித் தகுதி, தகுதித் தேர்வு தேர்ச்சி, ஊதிய விகிதம் ஆகியவற்றை கண்காணிக்கவும், தணிக்கை செய்யவும் முறையான கட்டமைப்புகள் இல்லை. அதனால் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு கூட உடனடியாக பணி நீக்க ஆபத்து இல்லை. ஆனால், அரசு  மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக பணியாற்றுவோர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால் மார்ச் 31&ஆம் தேதிக்குப் பிறகு ஒரு நாள் கூட பணியில்  நீடிக்க முடியாது. அவ்வாறு பணி நீக்கம் செய்வது அவர்களின் வாழ்க்கையையே இருளாக்கி விடும்.

 

தகுதித் தேர்வில் கடந்த 6 ஆண்டுகளாக தேர்ச்சி பெறாதது ஆசிரியர்களின் தவறு தானே என்று  தோன்றலாம். ஆனால், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதது நிச்சயம் ஆசிரியர்களின் தவறு அல்ல. 2011-ஆம் ஆண்டில் கல்வி பெறும் உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு இதுவரை 2012-ஆம் ஆண்டில் இருமுறை, 2013, 2017 ஆகிய ஆண்டுகளில் தலா ஒருமுறை என 4 முறை மட்டுமே ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. ஆனால், கல்வி பெறும் உரிமைச் சட்டப்படி ஆண்டுக்கு இருமுறை வீதம் 8 ஆண்டுகளில் 16 முறை தகுதித் தேர்வு நடத்தப்பட்டிருக்க வேண்டும். தேசிய அளவில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு அவ்வாறு நடத்தப்பட்டிருக்கிறது. அதேபோல் தமிழ்நாட்டிலும் தகுதித் தேர்வு நடத்தப்பட்டிருந்தால் அனைத்து ஆசிரியர்களும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பார்கள்.



 

anbumani ramadoss



ஆனால், நீதிமன்ற வழக்குகள் காரணமாக 2013 முதல் 2017 மார்ச் வரை தகுதித் தேர்வு நடத்தப்பட வில்லை. 2018-ஆம் ஆண்டில் அக்டோபர் 6 மற்றும் ஏழாம் தேதிகளில் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்த போதிலும், பல்வேறு குழப்பங்கள் காரணமாகத்  தேர்வு நடத்தப்படவில்லை. தகுதித் தேர்வில் ஆசிரியர்கள் தேர்ச்சி பெற முடியாததற்கு இது தான் முக்கியக் காரணம் ஆகும். இதனால் அவர்கள் பல உரிமைகளை இழந்துள்ளனர். தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாததைக் காரணம் காட்டி, கடந்த 8 ஆண்டுகளாக அவர்களுக்கு வளர் ஊதியம், ஊக்க ஊதியம், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு  உள்ளிட்ட எந்த உரிமைகளும் வழங்கப்படவில்லை. நியமன ஒப்புதல்கள் ஏற்கப்படாததால் பல ஆசிரியர், ஆசிரியைகள் ஊதியமின்றி பணிபுரிந்து வருகின்றனர்.

 

ஆசிரியர் தேர்வு வாரியம் நிலையான தலைவர் இல்லாமல் முடங்கிக் கிடப்பதால் உடனடியாக  ஆசிரியர்  தகுதித் தேர்வு நடத்தப்படுவதற்கு வாய்ப்பு இல்லை. ஒருவேளை நாளையே தகுதித் தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டால் கூட விண்ணப்பங்களைப் பெற்று தேர்வு நடத்தி முடிவுகளை வெளியிட குறைந்தது 4 மாதங்கள் ஆகும். அதற்குள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஆசிரியர்களின் வேலை பறிக்கப்பட்டு விடும். இதை தடுக்கும் பொறுப்பு மாநில அரசுக்கு உண்டு. அதை உணர்ந்து பணி இழக்கும் அரசு ஆசிரியர்களுக்கு மட்டும் சிறப்பு தகுதித் தேர்வு நடத்தி, உடனடியாக முடிவுகளை அறிவிக்க வேண்டும். ஒருவேளை அது சாத்தியமில்லை என்றால், தகுதித் தேர்வில் ஆசிரியர்கள் தேர்ச்சி பெறுவதற்கான காலக்கெடுவை மேலும் சில ஆண்டுகள் நீட்டித்து, அதற்குள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தகுதித் தேர்வை எழுதுவதற்கான நடவடிக்கைகளை தமிழக ஆட்சியாளர்கள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்