தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை மற்றும் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில், புதுக்கோட்டை மாவட்ட கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன் முன்னிலை வகிக்க, கலை பண்பாட்டுத்துறை ஆணையர் கலையரசி தலைமை தாங்கினார்.
இந்த விழாவுக்கு கலைஞர்கள் மேளதாளங்களுடன் ஆட்டம், பாட்டம், கரகாட்டத்துடன் வந்து கலந்துகொண்டனர். விழாவில் தேவதாசிகளின் கடைசி வாரிசான 80 வயதைக் கடந்தும் இன்றுவரை தொடர்ந்து சதிராட்டம் ஆடுவதுடன் அந்தக் கலையை இளைய சமுதாயத்திடம் பரப்பி, அழிந்து வரும் கலையை அழியாமல் காத்துவரும் விராலிமலை சதிர் முத்துக்கண்ணம்மாளுக்கு 'கலைமுதுமணி' விருதும், கிராமிய தவில் இசைக் கலைஞர் கோலேந்திரம் ராசேந்திரனுக்கு 'கலைநன்மணி' விருதும், கொத்தமங்கலம் சிற்பி திருநாவுக்கரசுக்கு 'கலைசுடர்மணி' விருதும் சமீபகாலமாக பிரபலமாகி வரும் கிராமிய நாட்டுப்புற பாடகர்களான கிராமிய கலைஞர்கள் செந்தில்கணேஷ்- ராஜலெட்சுமி தம்பதிக்கு 'கலைவளர்மணி' விருதும், ஓவியப் பிரிவில் 'கலைஇளமணி' விருது கல்கி செல்வனுக்கும் என கலையைக் காப்பாற்றி வரும் 5 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது
விழாவில் பேசிய கலை பண்பாட்டுத்துறை ஆணையர் கலையரசி, "நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் நினைவு நாளை அரசு விழாவாக நடத்தவும், அவரது 2 நாடகங்களை நடத்தவும், அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், முதல் நாடகம் (பவளக்கொடி) புதுக்கோட்டையில் அரங்கேற்றப்பட்டது. பல கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. தமிழ் மொழி, பண்பாடு, கலாச்சாரம் போன்றவை மிகவும் தொன்மையானது. இவற்றைக் காப்பாற்றி அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்க்க அரசு பல திட்டங்களை அறிவித்துள்ளது" என்றார்.
விழாவில் கலை பண்பாட்டுத்துறை அதிகாரிகள் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட முத்தமிழ் நாடக நடிகர்கள் பலர் கலந்துகொண்டனர்.