திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளபட்டியை சுற்றியுள்ள பகுதி மற்றும் ஆத்தூர் டேம் பகுதி, சடையாண்டி கோவில் ஆடலூர், பன்றிமலை பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போது மதயானைக் கூட்டம், பரியேறும்பெருமாள் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த நடிகர் கதிர், காமெடி நடிகர் சூரி, இளம்கதாநாயகி ரகசியா மற்றும் மாரிமுத்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் ஆத்தூர் டேம் அருகே உள்ள சடையாண்டி கோவில் பகுதியில் எடுக்கப்பட்டு வருகிறது.
காதல், கல்லூரி ஆகிய படங்களை இயக்கிய பாலாஜி சக்திவேலிடம் உதவியாளராக இருந்த பிரபாகரன் இப்படத்தை இயக்கி வருகிறார். டான்ஸ் மாஸ்டர் சதீஸ் தலைமையில் நடனக்குழுவினர் காமெடி நடிகர் சூரிக்கு நடனம் சொல்லிக்கொடுத்து கோவில் முன்பு ஆடுவது போல் படப்பிடிப்பு காட்சிகள் எடுக்கப்பட்டன. நடிகர் சூரி மஞ்சள் நிறத்தில் புலிவேடம் அணிந்து நடனமாடினார்.
பலமுறை டேக் வாங்கியும், சலிக்காமல் டான்ஸ் மாஸ்டர் சதீசிடம் டான்ஸ் மூவ்மெண்ட்டுக்களை கேட்டு நடனமாடினார். படப்பிடிப்பு காட்சிக்காக கோவில் பகுதியில் திருவிழா போல் செட் அமைத்து துரைப்பாண்டி தலைக்கட்டு, அன்புடன் அழைக்கிறேன் என பேனர்கள் வைத்து திருவிழாவின் போது கடை போடும் அனைத்து நபர்களையும் அழைத்து வந்து ஷெட்டிங்ஸ் அமைத்திருந்தனர்.
சின்னாளபட்டியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலரை தினசரி சம்பளத்திற்கு அழைத்து வந்து திருவிழாவை பார்ப்பது போல் காட்சி அமைத்திருந்தனர். பார்வையாளர்கள் தடை செய்யப்பட்டு ரகசியமாக எடுக்கப்பட்டு வரும் இந்த படத்திற்கு சர்பத் என தற்போது பெயரிடப்பட்டுள்ளனர். பெயர் மாற்றம் இருக்கும் என படப்பிடிப்பினர் கூறினார்கள்.
ரகசியமாக படம் எடுப்பது குறித்து படக்குழுவினர் கூறுகையில் குறைந்த பட்ஜெட்டில் இந்த படம் எடுக்கப்பட்டு வருவதால் படப்பிடிப்பு காட்சிகள் மற்றும் நடிகர்களின் தோற்றங்கள் வெளியே தெரிந்தால் வாட்சப் மற்றும் யூடியூப்பில் வைரலாக பரவிவிடும் என்பதால் ரகசியமாக எடுத்து வருகிறோம் என்றனர்.
படக்குழுவினர் வந்த வேன்கள் மற்றம் கார்கள் சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வந்த இருசக்கர வாகனங்களை அருகில் உள்ள டேம் தண்ணீரில் சுத்தம் செய்தது பொதுமக்களை அதிருப்தி அடைய செய்தது. திண்டுக்கல் மாநகராட்சி அதிகாரிகள் ஆத்தூர் காமராஜர் டேம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு காட்சிகள் நடைபெறும் போது அணைக்கட்டு பகுதியில் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும்.