திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது ஐங்குணம் கிராமம். இந்த கிராமத்திலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 450க்கும் அதிகமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
மாணவர்களுக்கான கழிவறையையே மாணவிகளும் பயன்படுத்தி வந்துள்ளனர். பள்ளி இல்லாத நாட்களில் அந்த கிராமத்தை சேர்ந்த சில இளைஞர்கள் போதையில் அங்குச் சென்று அசிங்கம் செய்வதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளனர். அதோடு, சில நேரங்களில் கழிவறையில் உள்ள பொருட்களை உடைத்துவிட்டு சென்றிருந்தனர். இதனால் அப்பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வந்தனர்.
இந்நிலையில், கடும் சிரமத்திற்கு உள்ளாகும் மாணவிகளின் நிலையைக் கண்டு, அந்தப் பள்ளியின் இடைநிலை ஆங்கில ஆசிரியராக பணியாற்றும் ஆனிரீட்டா என்கிற ஆசிரியரே தனது சொந்தப் பணத்தில் ரூபாய் 6.5 லட்சம் செலவு செய்து மாணவிகள் பயன்படுத்த 8 கழிவறைகள், ஆசிரியர்கள் பயன்படுத்த 2 கழிவறைகள் என 10 பாதுகாப்பான கழிவறைகளைக் கட்டித் தந்துள்ளார். இவ்வளவு தொகையை தனது சம்பளத்தில் இருந்து பிடிக்கப்படும் சேமநலநிதியில், சேமிப்பாக இருந்த தொகையை, அரசிடமிருந்து வாங்கி இந்த கழிவறைகளை கட்டித் தந்துள்ளார். முழு நேரமும் தண்ணீர் வசதியும் இதன் மூலம் செய்து தந்துள்ளார்.
எங்கள் பள்ளிக்கு சுற்றிலும் உள்ள 15 அரசு பள்ளிகளில் இருந்து ஆசிரியர்கள் கல்வித்துறை பயிற்சிக்காக அடிக்கடி வருவார்கள். ஆனால் அவர்கள் இயற்கை உபாதைகளை கழிக்க பள்ளியில் கழிப்பறை வசதிகளே கிடையாது. அக்கம்பக்கம் உள்ள வீடுகளில் உள்ள கழிவறைகளை பயன்படுத்துவார்கள். எங்களுடைய பள்ளியில் 270 மாணவிகள் படித்து வருகிறார்கள். அவர்களும் இப்படித்தான் இயற்கை உபாதைகளுக்கு போக முடியாமல் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது. அதனாலேயே கழிவறை கட்டித் தர வேண்டும் என முடிவு செய்து எங்கள் தலைமை ஆசிரியர் மற்றும் அதிகாரிகளிடம் அனுமதி வாங்கி இதனை கட்டித் தந்துள்ளேன் என்கிறார் ஆனிரீட்டா.
ஆசிரியர்கள் தங்களிடம் பயிலும் மாணவ மாணவிகளை தங்களது பிள்ளைகளாகவே பார்க்க வேண்டும் என்பார்கள். அப்படி பார்க்கும் ஆசிரியர்கள் வெகு குறைவு. மாணவ மாணவிகளை தங்கள் பிள்ளைகளாக பார்க்கும் ஆசிரியர்கள் அவர்கள் கஷ்டப்படுவதை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. மாணவிகள் துன்புறுவதை பார்த்து கழிவறை கட்டித் தந்து ஆசிரியர் என்கிற இடத்திலிருந்து மாணவிகளின் தாயாக உயர்ந்துள்ளார் ஆனிரீட்டா.