"பத்து ஆண்டுகளாக பகுதிநேர ஆசிரியர்களாக பணியாற்றுகின்ற 12,000 பேரை நிரந்தரமாக்குகின்ற தீர்மானத்தை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும்" என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 10 ஆண்டுகளாக அரசுப் பள்ளியில், ஆசிரியர்கள் பற்றாக்குறையை தீர்த்து பாடம் நடத்துவதற்காக பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்கள். பல நேரங்களில் பகுதிநேர ஆசிரியர்களை நம்பி முழுமையாகவே அரசுப் பள்ளிகள் நடந்த காலங்களும் உண்டு. பகுதிநேர ஆசிரியர்கள் திறமையானவர்களாக இருந்தால் மட்டும்தான் அந்தந்தப் பள்ளிகளில் பயன்படுத்திக் கொள்வார்கள். அதனால் திறமை வாய்ந்தவர்கள் தான் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள்.
பிற்காலத்தில் நிரந்தரமாக்கப்படுவீர்கள் என்ற வாக்குறுதியோடு தான் குறைந்த சம்பளத்தில் பணியில் சேர்ந்தார்கள். ஆரம்பத்தில் மாதம் 5,000 ரூபாயாக இருந்த சம்பளம் 10 ஆண்டுகள் கழித்து இன்றைக்கு 7,700 ரூபாயாக இருக்கிறது. அரசாங்கம் பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரமாக்கி விடக்கூடாது என்பதற்காக, உள்நோக்கத்தோடு திட்டமிட்டு உபயோகப்படுத்துகிறார்கள். வருடத்தில் 11 மாதங்கள் மட்டுமே பகுதிநேர ஆசிரியர்களுக்குச் சம்பளம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஒரு மாதம் சம்பளம் கொடுக்காமல் இருக்கின்ற காரணத்தினால் அவர்கள் தற்காலிகப் பணியாளராக தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். எந்த விதத்திலும் மாணவர்களுக்கு கற்பிக்கின்ற விஷயத்தில் அவர்கள் திறமை குறைந்தவர்களும் இல்லை.
10 ஆண்டுகளைத் தாண்டி குறைந்த சம்பளத்தில் பகுதிநேரமாக பணியாற்றக் கூடியவர்களாக, தற்காலிக பணியில் தொடர்ந்து கொண்டிருப்பதால் அவர்களைச் சார்ந்த குடும்பத்தார் எவ்வளவு சிரமப்படுவார்கள் என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும். எப்படியும் நிரந்தரமாக்கிவிடுவார்கள் என்ற நம்பிக்கையோடு பணியாற்றி கொண்டிருக்கின்ற பகுதிநேர ஆசிரியர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
ஆகவே தமிழக அரசு மனிதாபிமானத்தோடு கொடுத்த நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும். ஒருமனதாக எல்லாக் கட்சிகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்மானமாக தான் இது இருக்கும். இன்னும் தாமதப்படுத்தாமல் பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரமாக்குகின்ற முடிவை தமிழக அரசு எடுத்து, இந்தச் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே அதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி, அந்த 12 ஆயிரம் குடும்பங்களைக் காப்பாற்ற வேண்டும்." எனக் கூறியுள்ளார்.