இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான முத்துலட்சுமி ரெட்டியை கவுரவிக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் 30.07.2019 செவ்வாய்க்கிழமை ‘மருத்துவமனை தினம்’ கொண்டாடப்பட்டது. சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவமனை தின விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் துவங்கி வைத்தார். சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சென்னை கஸ்தூரிபா காந்தி அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற்ற விழாவில் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தலைமை தாங்கினார். ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி ‘டீன்’ நாராயணபாபு முன்னிலை வகித்தார். விழாவில் கஸ்தூரிபா காந்தி அரசு ஆஸ்பத்திரியின் இயக்குனர் டாக்டர் விஜயா உள்ளிட்ட டாக்டர்கள் உடனிருந்தனர். விழாவையொட்டி கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடைபெற்றது. பீலா ராஜேஷ், கர்ப்பிணிகளுக்கு வளையல் அணிவித்து, சீர்வரிசை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், கர்ப்பிணிகளுக்கு சுகப்பிர சவம் நடைபெற வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் சிறப்பு யோகா வகுப்பு நடந்து வருகிறது. இதற்காக யோகா பயிற்சி பெற்ற சிறப்பு டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
‘பிக் மீ’ என்ற மென்பொருள் மூலம் அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள அனைத்து கர்ப்பிணிகளுக்கும் தனித்தனி எண்கள் வழங்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய மருந்துகள், தேவையான பொருட்கள் அனைத்தும் முறையாக கொடுக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது. மேலும் இதன்மூலம் பிறப்பு சான்றிதழையும் எளிதில் பெற முடியும் என்றார்.