கரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக உள்ளவர்களில் பெரும்பாலானவர்களை வீட்டிலேயே தங்கி சிகிச்சை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
கரோனா வைரஸ் நேரடியாக உயிரிழப்பை ஏற்படுத்தாவிட்டாலும், நோய் எதிர்பாற்றல் குறைவாக உள்ளவர்களை உயிர்ப்பலி வாங்கி விடுகிறது. அதனால்தான், இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களைத் தனிமைப்படுத்தத் தீவிரமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தும் சிறப்பு வார்டுகள் தொடங்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்ற நிலையில், உள்நோயாளிகளின் எண்ணிக்கை பாதியாகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிநோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதும் குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் சேலத்தில், அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள், உள்நோயாளிகள் பிரிவுகள் கூட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.
சேலம் அரசு மருத்துவமனையில் ஒரு சில சிகிச்சை பிரிவுகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவசர சிகிச்சைக்கு மட்டுமே அரசு அரசு மருத்துவமனையை அணுக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்து சேலம் அரசு மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன் கூறியது:
சேலம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக இருந்து சிகிச்சை பெற்று வரும் சிலரின் உடல்நிலை நன்றாக இருப்பதால் அவர்கள், வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்குத் தேவையான மருந்துகள் 2 வாரத்திற்குக் கொடுக்கப்பட்டு உள்ளது.
நீரிழிவு நோயாளிகள், சிறுநீரக நோயாளிகள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் என மருந்து, மாத்திரைகள் எடுத்து வருபவர்களுக்கு இரண்டு வாரத்திற்குத் தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன.
இவர்கள் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே மருத்துவமனைக்கு வருவதற்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஏஆர்டி சிகிச்சை மையம், முழு உடல் பரிசோதனை என சில பிரிவுகள் நிறுத்தப்பட்டு உள்ளது. உடல்நிலை பாதிப்பு காரணமாக வருபவர்களுக்கு, சிகிச்சை அளிக்க அனைத்து மருத்துவப் பிரிவுகளில் இருந்தும் ஒரு மருத்துவர் வீதம் மட்டுமே செயல்படுவார்கள். கர்ப்பிணிப் பெண்கள் அரசு மருத்துவமனைக்கு வருவதற்கு எந்தத் தடையும் இல்லை. பொதுமக்கள் தேவை இல்லாமல் அரசு மருத்துவமனைக்கு வந்து கூட்டம் கூடுவதைத் தவிர்த்து, ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு சேலம் அரசு மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன் கூறினார்.