மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் நேற்று புறநோயாளிகள் சிகிச்சையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கிராமப்புற ஏழை நோயாளிகள் கடும் அவதி அடைந்தனர்.
மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
முதல்கட்டமாக அனைத்து மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளிலும் புறநோயாளிகள் பிரிவில் நேற்று (நவ. 4) பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலம் முழுவதும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
சேலம் மாவட்டத்தில் அனைத்து தாலுகா மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மேட்டூர் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் மோகன் குமாரமங்கலம் அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில் நேற்று புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை மருத்துவர்கள் புறக்கணித்தனர்.
சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு மட்டும் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்றுச்செல்கின்றனர். மருத்துவர்களின் போராட்டத்தால் தொலைதூரத்தில் இருந்து வந்த நோயாளிகள் உரிய சிகிச்சைகள் பெற முடியாத ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இதுகுறித்து நோயாளிகள் தரப்பில் கூறுகையில், ''உயிர்காக்கும் மருத்துவத்துறையில் பணியாற்றும் மருத்துவர்களே இப்படி பணிகளை புறக்கணித்து வேலைநிறுத்தம் செய்வதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதேநேரம் அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அரசும் செவி சாய்க்க வேண்டும்.
மருத்துவர்கள் மட்டுமல்ல; அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் ஊதிய உயர்வு கேட்டு போராடுவதுதான் இப்போது வழக்கமாகிவிட்டது. அனைவரும் அவரவர் பொறுப்பு உணர்ந்து பணியாற்ற வேண்டும்.
போராட்டம் குறித்து மருத்துவர்கள் முன்கூட்டியே பத்திரிகைகள் மூலம் தெரிவித்து இருந்தாலும், இதையெல்லாம் அறியாத கிராமப்புற ஏழைகள் வழக்கம்போல் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சைக்காக இங்கு வந்து ஏமாந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது,'' என்றனர்.
அரசு மருத்துவர்களிடம் கேட்டபோது, ''எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம். அரசு உடனடியாக எங்களை அழைத்துப் பேசாவிட்டால் போராட்டம் மேலும் தீவிரம் அடையும்,'' என்றனர்.